×

முக்கியமான பிரச்னைகள்ல கம்முன்னு இருக்காரு மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: அக்னிபாதை, விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதம் மற்றும் பாஜ எம்பி மீது சுமதப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு போன்ற முக்கியமான பிரச்னைகளில் பிரதமர் மோடி மவுனம் காப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. பிரதமர் மோடி நேற்று அரியானாவில் வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட வருவதையொட்டி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில் கூறியதாவது: பிரதமர் மோடி இன்று அரியானாவில் இருக்கிறார். பொதுவாக முக்கியமான பிரச்னைகளில் வாயே திறக்காமல் பிரதமர் மோடி மவுனம் காத்தாலும், அவரிடமிருந்து அரியானா மக்கள் சில விஷயங்களில் கருத்தை எதிர்பார்க்கிறார்கள்.

அதில் முதலவாது அக்னிபாதை திட்டம். இந்திய ராணுவத்திற்கு அதிகப்படியான துணிச்சலான வீரர்களை உருவாக்கிய மாநிலம் என்கிற வகையில், போதிய ஆலோசனை, சிந்தனை இல்லாமல் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கொண்டு வந்தது அரியானா மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த திட்டம் ஆயுதப் படைகளின் மன உறுதியை குலைப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை அரசு சமரசம் செய்கிறது. அடுத்ததாக, விவசாயிகள் பிரச்னைகளில் மோடி அரசின் அலட்சிய போக்கை கண்டித்து அரியானா மற்றும் அண்டை மாநிலங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த மாதம் முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவது போன்றவை விவசாயிகளின் கோரிக்கை. நமது விவசாயிகளின் இந்த கோரிக்கையை நிறைவேற்றவிடாமல் மோடியை தடுப்பது எது? விவசாயிகளுக்கு உறுதியளிப்பதை விட அவர்களின் குரலை நசுக்குவதற்கு ஏன் இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள். அரியானாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகள் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாஜ எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது குற்றம்சாட்டி உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமரின் நிலைப்பாடு என்ன? பிரிஜ் பூஷணையும் தனது குடும்பத்தில் ஒருவராக மோடி கருதுவதால் அதைப் பற்றி பேசாமல் இருக்கிறாரா? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

The post முக்கியமான பிரச்னைகள்ல கம்முன்னு இருக்காரு மோடி: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Congress ,Modi ,New Delhi ,BJP ,Aryana ,Dinakaran ,
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்