×

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைப்பு: காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி

சென்னை: இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. இதனால், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் புதிய ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமல்படுத்தியது. இதனால் தொழில்கள் முடங்கின, வியாபாரிகள் சொல்லாணா துயரத்துக்கு ஆளானார்கள். பொதுமக்கள் மத்தியிலும் பெரிய வரிதுறை விழுந்தது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் உயர்ந்தன. தங்கம், பெட்ரோல், டீசல் கடுமையாக உயர்ந்தன. உணவுப் பொருட்கள் விலையும் அதிகரித்தது. இவற்றை எல்லாம் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நாட்டில் ஜிஎஸ்டி வரி 2017-18ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அப்போது, பொருளாதார வளர்ச்சி 8.2ல் இருந்து 7.2 சதவீதமாக குறைந்தது. அதன்பின்னர் தொடர்ச்சியாக பொருளாதார வளர்ச்சி குறைந்த வண்ணம் உள்ளது. இந்த வரி விதிப்பால் இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத அளவில் வேலை வாய்ப்புகளை முற்றிலும் பறித்து விட்டது. தொழில்துறையில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. குறிப்பாக திருப்பூரில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வேலைகள் நடக்கிறது.

அங்கு பின்னலாடை தொழில்களை சார்ந்து பல சிறிய தொழில்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் அமைப்பு சாரா தொழில் நிறுவனங்களாகும். மதிப்பு கூட்டு வரி விதிக்கும் அளவுக்கு இவர்களுடைய தொழில்கள் இருக்காது. புதிய வரி விதிப்பால் இந்த நிறுவனங்கள் பாதிப்படைந்ததால், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல ஏற்றுமதி நிறுவனங்கள், சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்படைந்தன. இந்த வரி விதிப்பால் பல மாநிலங்களும் பாதிக்கப்பட்டன. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் அதிகமாக வரி வருவாயை ஒன்றிய அரசுக்கு வழங்குகின்றன. ஆனால் நமக்கு திரும்பக் கிடைப்பது என்னவோ ஒரு ரூபாய்க்கு 24 பைசாதான். இதனால் தமிழகம் உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்கள் பெரும் பாதிப்படைந்தன. மக்கள் தொகையை காரணம் காட்டி பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டன. அதோடு, மாநிலங்களுக்கும் முறையான இழப்பீடுகளை வழங்கவில்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு மாநில அரசை ஒன்றிய பாஜக அரசு தள்ளிவிட்டுள்ளது.

இதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று பெரும்பாலான மாநிலங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. பொதுமக்கள், வியாபாரிகள், தொழில் அதிபர்கள், சிறு தொழில் நிறுவனங்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை முற்றிலும் மாற்றியமைப்போம் என்று தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 5 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதில் முக்கியமானது இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு மாற்றியமைப்பது. இது குறித்து, ப.சிதம்பரம் கூறும்போது, கடந்த தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தோம். இந்த ஜிஎஸ்டி சட்டம் பிழையான சட்டம் என்று, தவறான சட்டம். இந்த சட்டத்தை முன்மொழிந்த போதே நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை கொண்டு வராதீர்கள் என்று நாங்கள் எல்லாம் சொன்னோம். ஜூலை மாதம் முதல் தேதி கொண்டு வர வேண்டும் என்று விதி எதுவும் கிடையாது. 3 மாதம் தள்ளி போடுங்கள், புதிய வரைவு சட்டத்தை தயாரியுங்கள் . நாங்கள் பார்க்கிறோம் அப்புறம் நிறைவேற்றலாம் என்றோம். இல்லை ஜூலை 1ம்தேதியே கொண்டு வர வேண்டும் என்றார்கள். அதனால் தான் நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கூட்டி மேளம் எல்லாம் அடித்து இந்த சட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த சட்டம் பிழையான சட்டம்.

சிறு வர்த்தகர்கள் முதல் பெரிய நிறுவனஙகள் வரை எல்லோரையும் கூப்பிட்டு கேளுங்கள் ஒரு குரலில் பதில் சொல்வார்கள். இந்த ஜிஎஸ்டி சட்டத்தை திருத்துங்கள் என்று சொல்வார்கள். எல்லா மாநிலங்களும் தற்போதைய ஜிஎஸ்டிசட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர். எனவே ஜிஎஸ்டி 2.0 கொண்டு வருவதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். அதில் சந்தேகமே இல்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் கொண்டு வருவதற்கு அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். முதலில் இந்த ஜிஎஸ்டி சட்டத்தை திருத்த வேண்டும். அதன் பின்பு பெட்ரோல், டீசலை கொண்டு வருவது குறித்து மாநிலங்களுடன் கலந்து பேசி தான் முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் மாநிங்களுக்கு மிகப் பெரிய வருவாய் பெட்ரோல், டீசல் தான். காங்கிரஸ் கொண்டு வரக்கூடிய ஜிஎஸ்டி 2.0 திட்டத்தின் படி யாருக்கும் இழப்பீடு ஏற்படாது. இழப்பீடு ஏற்பட்டால் இழப்பீடு தர வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. இதனால் ஜிஎஸ்டி வரி விதிப்பு முற்றிலம் மாற்றியமைக்கப்படும் என்றார். இந்த வாக்குறுதிகள் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கு பெரிய அளவில் வரவேற்பு உருவாகியுள்ளது.

The post இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைப்பு: காங்கிரஸ் அதிரடி வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : India ,Congress ,CHENNAI ,India coalition government ,BJP ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...