×

அனந்த்குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை : அரசமைப்புச் சட்டத்தை அவதூறு செய்துள்ள அனந்த்குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இப்போது இருக்கும் அரசமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானதாக உள்ளது. நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்று மோடி சொல்வது அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அமைப்பதற்காகத்தான்” என்று கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி திரு. அனந்த் குமார் ஹெக்டே பேசியிருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட கருத்து அல்ல; பாஜக, ஆர்எஸ்எஸ் ஆகிய சங்பரிவார்களின் மிகவும் ஆழமான – வலுவான- முதன்மையான கருத்தேயாகும். அதனையே ஆனந்த்குமார் ஹெக்டே வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிவதே அவர்களின் இறுதி இலக்காகும். இதுவே அவர்களின் உறுதிமிக்க நிலைப்பாடாகும். அரசமைப்புச் சட்டத்தின்மீதே வெளிப்படையாக வெறுப்பை விதைக்கும் முயற்சியில் தற்போது சங்பரிவார்கள் துணிந்துவிட்டனர் என்பதற்கு ஆனந்த குமாரின் பேச்சு சான்றாகவுள்ளது. அரசமைப்புச் சட்டம் இந்து மதத்துக்கு எதிரானது என அவதூறு செய்யும் அனந்த் குமார் ஹெக்டேவை உடனே தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும்; வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்ய வேண்டும்; அத்துடன், அவரது குடியுரிமையையும் ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம்.

அரசமைப்புச் சட்டத்தை முற்றாக சிதைப்பது தான் பாஜகவின் ஒரே இலக்கு என்பதையும்; இத்தகைய சமூகப் பிளவுவாத சங்பரிவார் சக்திகளிடமிருந்து இந்தியாவைப் பாதுகாத்திட வேண்டும் என்பதையும்; அதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே முதன்மையானது என்பதையும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நாடெங்கிலும் நாள்தோறும் இதனையே பெருங்கவலையோடு- அதேவேளையில் மிகுந்த பொறுப்புணர்வோடு இடையறாது எடுத்துரைத்து வருகிறோம்.

” நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டுமென்றும்; மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவேண்டுமென்றும் திரு.மோடியும், திரு. அமித் ஷாவும் பேசி வருவது அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகத்தான் ” என்று பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரே தற்போது தயக்கமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.பாஜகவின் சதித்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து எழுப்பி வந்த அய்யம் உண்மையானதுதான் என்று இப்போது உறுதியாகியுள்ளது.

2019 ஆம் ஆண்டு 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை ஆட்சியை பாஜக அமைத்தது. ஆனால் அந்தப் பெரும்பான்மை அதிகாரத்தை வைத்துக் கொண்டு மக்களுக்கு நலம் பயக்கும் எந்த ஒரு சட்டத்தையும்; திட்டத்தையும் அவர்கள் கொண்டு வரவில்லையென்பதே உண்மை. மாறாக, விவசாயிகளை வஞ்சிப்பதற்காகவும்; சிறுபான்மையினர், பழங்குடியின மக்கள் முதலானவர்களின் குடியுரிமையைப் பறிப்பதற்காகவும்;எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவதற்காகவும் தான் பல்வேறு சட்டங்களை இயற்றினார்கள். பொதுத்துறை நிறுவனங்களைக் ‘கார்ப்பரேட்’டுகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்கள். இப்போது 400 இடங்களுக்கு மேல் வெல்லவேண்டும் என்கிறார்கள். அது இந்த நாட்டின் அடிப்படையையே சிதைப்பதற்குத்தான் என்பதை ஆனந்த குமார் ஹெக்டேவின் வெளிப்படையான பேச்சிலிருந்து இப்போதாவது பொதுமக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்துள்ள அரசமைப்புச் சட்டம் இந்திய குடிமக்களிடையே சமத்துவத்தை உறுதி செய்கிறது. பிறப்பின் அடிப்படையிலான உயர்வு- தாழ்வுகளைக் கற்பிக்கும் மனுவாதக் கோட்பாட்டுக்கு இச்சட்டம் முற்றிலும் நேர் எதிரானதாக உள்ளது. எனவே தான் அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதில் பாஜகவினர் முனைப்பாக உள்ளனர்.

‘இப்போதிருக்கும் அரசமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது’ என்று கூறுவதன் மூலம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான வெறுப்பை நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே அவர்கள் பரப்புகிறார்கள். இது இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். அத்துடன் குடியுரிமைச் சட்டம் 1955 இன் கீழ் குற்றமும் ஆகும். இத்தகைய குற்றத்தைப் புரிபவரின் குடியுரிமையை ஒன்றிய அரசு பறிக்கலாம் என அச்சட்டத்தின் பிரிவு 10 (2) (b) கூறுகிறது. அனந்த் குமார் ஹெக்டேவின் பேச்சு அவரது குடியுரிமையைப் பறிப்பதற்குப் போதுமான ஆதாரமாக உள்ளது.

எனவே, இந்திய ஒன்றிய அரசு அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். குறிப்பாக, தேசியப் பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் அவரைச் சிறைப்படுத்திட வேண்டும். அத்துடன், அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதைத் தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post அனந்த்குமார் ஹெக்டேவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ananthkumar Hegde ,Thirumavalavan ,Chennai ,Visika ,
× RELATED அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜ...