×

வாகனம் திரும்புவதற்கு வழியில்லை பல கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உலர்களமானது

* தடுப்புக்கட்டை இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்

* அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே ரூ.3.39 கோடியில் திறக்கப்பட்ட பாலம் தரமில்லாமலும், வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பில்லாததாலும் விவசாயிகள் உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பாலத்தின் பக்கவாட்டில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிக கிராமங்களை கொண்ட விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை, மலட்டாறு, சங்கராபரணி உள்ளிட்ட ஆறுகள் உள்ளன.

இதனிடையே மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்படுவதும், விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கையின்படி படிப்படியாக முக்கிய பகுதிகளில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

அதன்படி விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஜகநாதபுரம்-வடவாம்பலம் இடையே ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கடந்த 2021-2022ம் ஆண்டு மலட்டாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தற்போது திறப்பு விழா கண்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக ஜகநாதபுரம் பகுதியிலிருந்து வடவாம்பலம், சின்னமடம், நரசிங்கபுரம் வழியாக பண்ருட்டி, கடலூர் மாவட்டத்துக்கு செல்லவும், விவசாயிகள் கரும்பு, நெல் உள்ளிட்ட விளைபொருட்களை கொண்டு செல்லவும் பயனுள்ளதாக இந்த பாலம் கட்டப்பட்டது. அதேபோல் இந்த மார்க்கத்திலிருந்து சிறுவந்தாடு, மடுகரை, புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

இதனிடையே தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ள நிலையில் பாலத்தின் ஏறும், இறங்கும் வழியில் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்காமல் பிளாஸ்டிக் பைப்புகளை வைத்து பெயரளவுக்கு கட்டப்பட்டுள்ளதாக விவசாயிகள், பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமலும், திரும்ப வழியில்லாத நிலை உள்ளதால் யாருக்கும் பயனற்று இந்த பாலம் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனிடையே திறப்பு விழா கண்ட பாலத்தில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ள நிலையில் தற்போது விவசாயிகள் உலர்களமாக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். வாகனங்கள் ஏதும் செல்லாத நிலையில் உளுந்து உள்ளிட்ட சிறுதானிய பயிர்களை காயவைக்கும் உலர்களமாக பயன்படுத்தி வருகின்றனர். பல கோடியில் விவசாயிகள், கிராம மக்களின் நலனுக்காக கட்டப்பட்ட இந்த பாலம் யாருக்கும் பயனற்று தற்போது விவசாயிகள் உலர்களமாக மாறியுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விவசாயிகள், கிராம மக்களிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவும், மீண்டும் பாலத்தில் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமணன் கூறுகையில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் கரும்பு, நெல் மூட்டைகளை வாகனங்களில் இந்த வழியாகத்தான் கொண்டு வரவேண்டும். ஆனால் வாகனங்கள் திரும்புவதற்கு இடவசதியே கிடையாது. மேலும் பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புகள் இரும்பு அல்லது கான்கிரீட்டில் கட்டைகள் அமைக்கப்படும். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைப்புகளில் வைத்துள்ளனர். வாகனங்கள் மோதினாலும் கீழே விழுந்து பெரும் விபத்துக்கள்தான் நேரிடும். எனவே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் கிராமமக்கள், விவசாயிகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

The post வாகனம் திரும்புவதற்கு வழியில்லை பல கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உலர்களமானது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,crore ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...