×

தவளக்குப்பத்தில் தனியார் விடுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை

தவளக்குப்பம் : புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காதல் ஜோடி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அணுகம்பட்டு பகுதியைச் சேர்ந்த கலியமூர்த்தி என்பவரின் மகன் சுபாஷ் (25). இவர் போர்வெல் வேலை செய்து வருகிறார். குள்ளஞ்சாவடி அரசங்குப்பம் பகுதியை சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவரின் மகள் சபிதா (21). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்துள்ளார்.

இவர்கள் கடந்த 7ம் தேதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் தங்கியிருந்த அறை வெகு நேரமாக திறக்கப்படவில்லை. இதனால் விடுதி ஊழியர்கள் சந்தேகமடைந்து தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று விடுதியின் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது அந்த அறையில் இருந்த மின் விசிறியில் 2 பேரும் துப்பட்டா மூலம் தூக்கப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு கதிர்காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காதல் ஜோடி தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவந்தது.

இவர்களது காதலுக்கு தொடக்கம் முதலே இருவரது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வது என இருவரும் முடிவு செய்தனர். ஆனால் திருமணம் செய்தால் நிம்மதியாக வாழ முடியாது என எண்ணிய இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி தவளகுப்பத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தனியார் விடுதியில் காதல் ஜோடிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post தவளக்குப்பத்தில் தனியார் விடுதியில் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thavalakkuppam ,Thavalakuppam ,Puducherry ,Subhash ,Kaliamoorthy ,Kullanjavadi Antampattu ,Cuddalore district.… ,
× RELATED `முதியோர் பென்சன் ₹8 ஆயிரம்...