×

மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது : வைகோ வருத்தம்

சென்னை : மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அரைநூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் என்எல்சி இந்தியா நிறுவனம் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நவரத்னா நிறுவனமாகும்· நெய்வேலி நிலக்கரி சுங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி மூலம், அனல் மின்சாரம் உற்பத்திச் செய்யப்பட்டு தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்கிறது. இந்நிறுவனத்தில் நிரந்தர தொழிலாளர்கள்,பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என இருபத்தைந்து ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர்.பின்தங்கிய கடலூர் மாவட்டத்தின் ஒரே தொழில் நிறுவனமான என்.எல்.சி. இந்தியா ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.

ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டி வரும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் பங்குதாரர் முறையின்படி, 2023ஆம் டிசம்பர் நிலவரப்படி நிறுவனத்தில் 79.2 விழுக்காடு பங்குகளை ஒன்றிய அரசு வைத்திருக்கிறது.இதில் 7 விழுக்காடு பங்குகளை ஆஃபர் பார் சேல்ஸ் முறையில் விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது எனவும், இந்தப் பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக 2,000 கோடி ரூபாய் முதல் 2,100 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2014 ல் பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்றதிலிருந்து லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்து வருகிறது.ஒன்றிய அரசின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகள், ரயில்வே, மின் உற்பத்தி, மின் விநியோகம், சுரங்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்ந்த நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டத்தை (National Monetisation Pipeline)செயல் படுத்துவோம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி நிலை அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

அதன்படி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடுப் பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு முனைந்துள்ளது.2002ம் ஆண்டு,பிப்ரவரி மாதம் என்.எல்.சி நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை விற்பனை செய்திட வாஜ்பாய் அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. என்.எல்.சி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.கொந்தளிப்பான அந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் 2002, மார்ச்சு 19 ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தேன்.

நாட்டுக்கு ஒளியூட்டும் என்.எல்.சி நிறுவனத்தை தனியாருக்குத் தாரை வார்க்கக் கூடாது என்று நான் வாதங்களை எடுத்துரைத்தேன். மக்களவையில் இருந்த அனைத்துக் கட்சிகளும் என் கருத்தை ஆதரித்தன.மறுநாள் இரவு பிரதமர் வாஜ்பாய் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து என்.எல்.சியின் அனைத்து தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவை நேரில் அளித்தேன். என்.எல்.சி நிறுவனப் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என வற்புறுத்தினேன்.அமைச்சரவை முடிவாயிற்றே, எப்படி மாற்ற முடியும்? என்று வாஜ்பாய் அவர்கள் கேட்டார்.நீங்கள் நினைத்தால் இப்போதே அந்த முடிவை மாற்ற முடியும். தமிழ்நாட்டிற்காக இதனை நீங்கள் செய்ய வேண்டும் என்றேன்.

நீண்ட ஆலோசனைக்குப் பின், என்.எல்.சி நிறுவனம் தனியார் மயமாக்கப் படாது என்று பிரதமர் வாஜ்பாய் உறுதி அளித்தார்.பிரதமர் இல்லத்திலிருந்தே ,என்.எல்.சி தனியார்மயமாகாது என்று பிரதமர் உறுதி கூறியதை அவரது அனுமதியுடன் செய்தி ஏடுகளுக்கு தெரிவித்தேன்.என்.எல்.சி தனியார் மயமாகாமல் தடுத்தேன் என்ற மனநிறைவு ஏற்பட்டது.தற்போது மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது. இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வலியுறுத்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடி தலைமையிலான அரசு என்.எல்.சி பங்குகளை விற்க முனைந்து இருப்பது வேதனை தருகிறது : வைகோ வருத்தம் appeared first on Dinakaran.

Tags : Modi L. ,Wiko ,Chennai ,Modi L. VAIGO ,Secretary General ,M. B. ,Yuma Wiko ,NLC India ,Tamil Nadu ,Modi ,N. L. ,Waiko ,Dinakaran ,
× RELATED எடப்பாடி, ஓபிஎஸ், செல்வப்பெருந்தகை,...