×

ஊழலை பேச அருகதையும் இல்லை ஓட்டு கேட்கிற உரிமையும் இல்லை: மோடியை நார் நாராக கிழித்த முத்தரசன்

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் பத்திரம் மூலம் மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்ற கட்சி பாரதிய ஜனதா கட்சி 60% வரை நிதி பெற்று இருக்கிறார்கள். இத்தகைய ஊழலில் ஈடுபட்டிருக்கக் கூடிய நரேந்திர மோடி ஊழல் பற்றி பேசுவதற்கு கிஞ்சிற்றும் அருகதை அற்றவர். பி.எம் கேரில் எவ்வளவு நிதி வந்தது எங்க போனது என்பதை யாரும் கேட்க முடியாது. இதை காட்டிலும் பெரிய ஊழல் என்னவாக இருக்க முடியும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிய வியாபாரிகள். தேச உடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளில் இருந்து கடன் பெறுகிறார்கள். அவர்கள் பெறுகிற கடனை திரும்ப செலுத்துவதில்லை. வட்டியும் செலுத்துவதில்லை. அவை அனைத்தும் வாராக் கடனாக மாற்றப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே மோடிக்கு ஊழல் பற்றி பேச அனுமதி இல்லை. இந்தியாவில் இருக்கிற 140 கோடி மக்களும் என் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று மோடி பேசுகிறார்.

குடும்பத்தை பற்றி எல்லாம் பேசுவதற்கு மோடிக்கு அருகதை இல்லை. தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம், மெட்ரோ ரயில் பணிக்கு ஒரு பைசா தராமல், பிரதமர் பொறுப்பு என்பது மிக உயர்ந்த பொறுப்பு அந்த பொறுப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் பொய் சொல்லக்கூடாது. தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யாத பிரதமருக்கு தமிழகத்தில் ஓட்டு கேட்க என்ன உரிமை இருக்கிறது. தமிழகத்திற்கு வருவதற்கு மோடிக்கு தார்மீக ரீதியான உரிமை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

* தேர்தல் ஆணையர் ராஜினாமா ஏன்? உண்மையை சொல்லுங்க
முத்தரசன் கூறுகையில், ‘தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் ஏன் ராஜினாமா செய்தார்?. அவரின் ராஜினாமா ஏன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது? என்பது குறித்து வெளிப்படையாக சொல்ல வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் ஒரு ஜனநாயக முறையில் நடைபெறுமா என்கின்ற ஒரு மிகப்பெரிய ஐயம் ஏற்பட்டுள்ளது.

The post ஊழலை பேச அருகதையும் இல்லை ஓட்டு கேட்கிற உரிமையும் இல்லை: மோடியை நார் நாராக கிழித்த முத்தரசன் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Modi ,Coimbatore ,state ,Communist Party of India ,Bharatiya Janata Party ,Narendra ,Dinakaran ,
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி மக்களை...