×
Saravana Stores

தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: புரோக்கர்களுக்கு பிரித்து கொடுத்த 3 பேர் அதிரடி கைது

சென்னை: ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை உதவியுடன் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். போதைப்பொருட்களை கடத்தி வந்த 3 பேரையும் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகள் மற்றும் குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் போதைப் பொருள் கடத்தி வரும் நபர்கள் மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் பல நூறு கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் கடத்தி வந்த நபர்களின் வங்கி கணக்குகளும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் முடக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வழியாக திருச்சிக்கு பல கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருள் கடத்தி வருவதாக சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அஸ்ரா கார்க் சில ஆண்டுகள் சிபிஐயில் பணியாற்றியதால் வெளிநாடுகளில் உள்ள தொடர்புகள் மூலம் இந்த தகவல் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க் தலைமையிலான தனிப்படையினர் தாய்லாந்து நாட்டில் இருந்து போதைப்பொருட்களை திருச்சி விமானம் நிலையம் வழியாக சென்னைக்கு கடத்தி வந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த யாசர் அராபத் (34), சென்னை ராயப்பேட்டை கரீம் சுபேதார் தெருவை சேர்ந்த முகமது ஜைனுல் ரியாஸ்(30), சென்னை மாங்காடு ரங்கநாதபுரம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த சண்முகராஜ்(65) ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருளை தனிப்படையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த இப்ராஹிம் மற்றும் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோர் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தற்போது தாய்லாந்தில் உள்ளனர்.

கடந்த 3ம் தேதி இப்ராஹிம் நண்பரான யாசர் அராபத் என்பவரை விமானம் மூலம் சென்னையில் இருந்து கொல்கத்தா வந்து மீண்டும் கொல்கத்தாவில் இருந்து பாங்காக்கிற்கு கார்த்திக் வரவழைத்துள்ளார். அங்கு ஏற்கனவே தாய்லாந்து நாட்டில் மட்டும் கிடைக்க கூடிய ரூ.1 கோடி மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருளை, உணவு பொருட்கள் என்று பார்சல் மூலம் கடந்த 8ம் தேதி யாசர் அராபத் மூலம் தாய்லாந்து நாட்டில் இருந்து சிங்கப்பூர் வழியாக திருச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி உள்ளனர்.

யாசர் அராபத், கார்த்திக் திட்டத்தின் படி திருச்சி விமான நிலையத்தில் ஒன்றிய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் ஒன்றிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையை மீறி வெளியே கொண்டு வந்துள்ளார். யாசர் அராபத் கொண்டு வரும் பார்சலில் போதைப்பொருட்கள் இருப்பது தெரியும். ஆனால் கூடுதல் கமிஷனர் போதைப்பொருள் கும்பலை கூண்டோடு கைது செய்ய வேண்டும். போதைப்பொருட்கள் எங்கு எடுத்து செல்கிறார்கள். அதன் பின்னணி குறித்து கண்காணித்து கடைசியாக கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நாங்கள், போதைப்பொருட்களை கடத்தி வந்த யாசர் அராபத்தை உடனே கைது செய்யாமல், ரகசியமாக அவரை பின் தொடர்ந்தோம். திருச்சியில் இருந்து பேருந்து மூலம் கடந்த 9ம் ேததி காலை சென்னை குமணன்சாவடி அருகே வந்து இறங்கினார். உடனே யாசர் அராபத் வாட்ஸ் அப் கால் மூலம் தாய்லாந்து நாட்டில் உள்ள கார்த்திக்கை தொடர்பு கொண்டார். அவர் தனது தந்தை சண்முகராஜ் மற்றும் நண்பர் முகமது ஜைனுல் ரியாஸ் ஆகியோரிடம் கொடுக்கும்படி கூறி, அவர்களின் தொடர்பு எண்களை கொடுத்துள்ளார்.

அதன்படி யாசர் அராபத், போதைப்பொருள் கடத்தல் மன்னன் கார்த்திக் தந்தை சண்முகராஜாவை தொடர்பு கொண்டார். அப்போது அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி குமணன்சாவடி அருகே இருந்தனர். பிறகு 3 பேரிடமும் போதைப்பொருள் பார்சலை யாசர் அராபத் கொடுத்தார். அதன்பிறகு சண்முகராஜ் தனது மகன் கார்த்திக்கை தொடர்பு கொண்டு, எந்த இடத்தில் யாரிடம் இந்த பார்சலை கொடுக்க வேண்டும் என்ற விவரத்தை கேட்டறிந்தார்.

அதன்படி சண்முகராஜ் மற்றும் கார்த்திக் நண்பரான முகமது ஜைனுல் ரியாஸ், யாசர் அராபத் ஆகியோர் 9ம் தேதி மதியம் 3 மணிக்கு சென்னையில் 3 இடங்களில் கார்த்திக் வாட்ஸ் அப் கால் மூலம் கூறிய நபர்களிடம் பார்சலை கொடுத்தனர். அதற்கு முன்பாக, உணவு பொருட்களுடன் கொண்டு வந்த போதைப்பொருட்கள் முகமது ஜைனுல் ரியாஸ் பிரித்து தனித்தனியாக யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று எடை போட்டு வைத்தார்.

அதைதொடர்ந்து யாசர் அராபத், சண்முகராஜ், முகமது ஜைனுல் ரியாஸ் ஆகியோரை அதிரடியாக கைது செய்து, ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தோம். மேலும், இதுதொடர் பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்த விசாரணை முடிந்த பிறகு போதைப் பொருள் கடத்தல் தொடர்புடைய அனைவரையும் கைது செய்வோம். இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

* ‘போதைப்பொருள் எந்த வழியில் வந்தாலும் தடுப்போம்’
தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட உயர் ரக போதைப்பொருள் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் அஸ்ரா கார்க்கிடம் கேட்ட போது, ‘சென்னையில் குறிப்பாக வட சென்னையில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. இதனால் போதைப்பொருட்களை வெவ்வேறு வழிகளில் கொண்டு வர போதைப்பொருட்கள் கடத்தல் கும்பல் ஈடுபட்டுள்ளது. போதைப்பொருட்கள் எந்த வகையில் சென்னைக்குள் கொண்டு வந்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்.

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்டது உயர் ரக போதைப்பொருள். இது கஞ்சா இலை போன்று இருக்கும். ஆனால் இது ஒரு கிலோ ரூ.45 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விலை போகும். ஒரு கிராம் ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பெரிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பார்களில் இந்த போதை பொருட்கள் விற்பனை செய்ய கடத்தி வரப்பட்டது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக உள்ள கார்த்திக் மற்றும் அவரது நண்பரான இப்ராஹிம் ஆகியோர் தற்போது தாய்லாந்தில் உள்ளனர். அவர்களை சென்னை கொண்டு வர தூதரக மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் தந்தை சண்முகராஜ், யாசர் அராபத், முகமது ஜைனுல் ரியாஸ் ஆகியோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதைப்பொருட்கள் எந்த வழியில் வந்தாலும் அதற்கு எதிராக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

The post தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: புரோக்கர்களுக்கு பிரித்து கொடுத்த 3 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Thailand ,Chennai ,Singapore ,Union Revenue Intelligence Department ,North Zone ,Asra ,Garg ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனி கவனம்...