×

ஐகோர்ட் உத்தரவின் பேரில் வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நிவாரணம்: தலா ரூ.10 லட்சம் நிதியுதவி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி கிராமத்தில் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலை கோட்டாட்சியர் வில்சன் ராசசேகர் நேற்று முன்தினம் வழங்கினார். தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே வாச்சாத்தி கிராமத்தில் 1992ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டதாக 215 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தண்டனைக்கு எதிரான மேல் முறையீட்டு மனுக்கள், கடந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதி வேல்முருகன், மேல் முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கவும், இதில் ரூ.5லட்சம் அரசாங்கமும், 18 பேர் மீதான பலாத்கார குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து, ரூ.5 லட்சத்தை வசூலித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைக் கருத்தில் கொண்டு, அரசு கவனமாகப் பரிசோதித்த பிறகு பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் ரூ.1 கோடியே 80 லட்சம் இழப்பீடாக வழங்க கடந்த 8ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட 18 பேரை கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமையிலான, வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து தலா ரூ.10 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினர்.

 

The post ஐகோர்ட் உத்தரவின் பேரில் வாச்சாத்தியில் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு நிவாரணம்: தலா ரூ.10 லட்சம் நிதியுதவி appeared first on Dinakaran.

Tags : ICourt ,Dharmapuri ,District Commissioner ,Wilson Rasasekar ,Vachathi ,Arur ,Dharmapuri district ,Aroor, Dharmapuri district ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மத்திய...