×

திமுகவை களங்கப்படுத்தும் நோக்கோடு பாஜ செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் ஈடேறாது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: திமுகவை களங்கப்படுத்தும் நோக்கோடு பாஜ செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் ஈடேறாது. ஜாபர் சாதிக்குடன் தொடர்புடையவர்கள் பாஜ, அதிமுகவில் தான் இருக்கிறார்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்- சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அளித்த பேட்டி:
திமுகவைக் களங்கப்படுத்தும் நோக்கோடு பாஜ செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் ஈடேறாது. அகில இந்திய அளவிலும் ஈடேறாது. பாஜ அரசின் சர்வாதிகார பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும், நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவில் அணி திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கும் திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று பாஜ தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. திமுக அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு என்சிபி-ஐக் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றதும் போதைப்பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றமும் பாராட்டி இருக்கிறது. ஆனால் திமுகவை என்சிபி-ஐ வைத்து மிரட்டிப் பார்க்கலாம் என்று எண்ணிப் பார்க்கிறார்கள். என்சிபி விசாரணை அமைப்பினுடைய துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். ஒரு விசாரணை அமைப்பின் துணை இயக்குநர் புலன் விசாரணை முழுமையாக நடைபெறாமலேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கின்றார். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு சந்திக்க வேண்டும், ஆனால் அதற்கு முன்னதாகவே திமுகவைக் கொச்சைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகப் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதன் மூலமாக ஏதாவது அரசியல் ஆதாயம் அடைய முடியுமா என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் குட்கா வியாபாரிகளுக்கு அமைச்சர்களே துணையாக இருந்தது என்பது நாடறிந்த உண்மை. நீதிமன்றத்தில் நாங்கள் போராடி அந்த அமைச்சர் மீதும், தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ விசாரணை நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கிறோம். இதற்கெல்லாம் ஆட்சியாளர்களே துணையாக இருந்தார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஒரு பேப்பர் எடுக்கப்பட்டது, அதில் 85 கோடி ரூபாய் எந்தெந்த அமைச்சர்களுக்குத் தரப்பட்டன என்ற விவரங்கள் இருக்கிறது. அதில் வருமானவரித் துறையோ, அமலாக்கத் துறையோ எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. எந்த வகையிலாவது பாஜவை தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ஜாபர் சாதிக் மீது பிப்ரவரி 15ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி, தேடப்படும் குற்றவாளி என அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவரி 21ம் தேதி மங்கை என்ற திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டு இருக்கின்றார். அப்போது உங்களுடைய என்சிபி எங்கே போனது?. 2013ம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு வந்தது, அன்றைக்கு அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ஒழுங்காக அந்த வழக்கையும் நடத்தவில்லை. அன்றைக்கு ஜாபர் சாதிக்கிற்காக வழக்கினை நடத்தியவர் பாஜவினுடைய வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ். ஜாபர் சாதிக்கைக் காப்பாற்றியது அதிமுக ஆட்சியிலேதான் நடந்தது.

திமுகவில் 2 கோடி பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வருகின்றவர்களை எல்லாம் சோதித்துப் பார்த்துக் கட்சியில் சேர்க்க முடியாது. அதே நேரத்தில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜாபர் சாதிக் போன்றவர்கள் கட்சியை விட்டே நீக்கப்பட்டிருக்கிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்திருப்பது குஜராத்தின் முந்த்ரா துறைமுகம்தான். அந்தத் துறைமுகத்திலிருந்து 21,000 கிலோவும் கடத்தப்பட்டுள்ளது, 9,000 கிலோவும் கடத்தப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானிலிருந்தும் கடத்தப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிராவில்தான் அதிகமான வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. தேர்தல் வருகின்ற போது ஏதாவது பொய்யான குற்றச்சாட்டைத் திமுகவின் மீது சுமத்தி விட முடியாதா என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அவர்களுக்கு ஒன்றை ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல. தி.மு.க என்றுமே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது. அதற்குத் துணை போகிறவர்கள் யாரையும் வைத்துக்கொள்ள மாட்டோம் என உறுதிபட கூறுகிறோம்.

என்சிபி தமிழ்நாட்டில் ஏதாவது பிடித்தார்களா? ஜாபர் சாதிக் பற்றி சொல்கிறபோது டெல்லியிலும், வேறு மாநிலத்திலும் தான் போதைப்பொருள் பிடிக்கப்பட்டு இருக்கிறது, தமிழ்நாட்டில் கிடையாது. தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் போதைப் பொருள் நடமாட்டத்தை முழுமையாகத் தடுத்து வைத்திருக்கிறோம். கஞ்சா பயிர் ஒரு சென்ட் கூட நடப்படாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது உலகத்திற்கு தெரியும். அப்படிப்பட்ட இடத்தில் இருக்கும் நாங்கள் நிச்சயமாக போதைப் பொருள் நடமாட்டத்திற்கு உறுதுணையாக எந்த வகையிலும் இருக்க மாட்டோம்.

தமிழ்நாட்டை அவமதிக்கும் செயலாக, தமிழ்நாடு போதைப் பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது எனக் கூறி தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கும் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டைப் போன்ற வளர்ச்சியை எங்களுக்கு ஏன் ஏற்படுத்தவில்லை என ஒன்றிய பாஜகவை நோக்கி வட இந்திய மக்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

போதைப் பொருள் மாநிலம் போல தமிழ்நாட்டை சித்தரித்தால் தான், தமிழ்நாட்டின் வளர்ச்சி வட இந்தியாவில் பேசுபொருளாகாது என்பதற்காகவே பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜவில் இருக்கக்கூடிய பலர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களெல்லாம் பாஜவில் சேர்ந்தவுடன் புனிதர்களாக மாறிவிட்டார்கள்.

முன்னாலேயே நடந்த சம்பவத்தைத் திமுக மீது பழிபோடலாம் என தப்புக் கணக்குப் போட்டார்கள். ஜாபர் சாதிக் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார், அவரோடு தொடர்புடையவர்கள் பாஜ, அதிமுகவில் தான் இருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கை எங்கே பிடித்தார்கள் என என்சிபி தெளிவாகக் கூறவில்லை. விசாரணை நடைபெறாமலேயே செய்தியாளர் சந்திப்பு நடத்தியது தவறு, கண்டிக்கத்தக்கது. குற்றவாளிக்குத் துணைபோக மாட்டோம், சட்டப்பூர்வமாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தருவோம். ஒன்றிய அரசு தகுந்த சாட்சியங்களோடு வழக்கு தொடர்ந்தால் மகிழ்ச்சி. அவர் ஒரு பைசா கூட கட்சிக்கு தரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது திமுக தலைமைக்கழக சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி. உடன் இருந்தார்.

The post திமுகவை களங்கப்படுத்தும் நோக்கோடு பாஜ செய்யும் அரசியல் தமிழ்நாட்டில் ஈடேறாது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,DMK ,Tamil Nadu ,Law Minister ,Raghupathi Petty ,CHENNAI ,Raghupathi ,Zafar Sadiq ,AIADMK ,Pudukottai South District ,Legal Department ,Chennai Anna University ,
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...