×

உன்னை சொல்லி குற்றமில்லை… என்னை சொல்லி குற்றமில்லை… காலம் செய்த கோலமடி: கூட்டணிக்காக நடக்கும் ரகசிய பேரங்கள்

‘ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்கள்’. இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ அதிமுக-பாஜவுக்கு பொருத்தமாக இருக்கும். ஜெயலலிதா இருந்தவரை கட்டுக்கோப்பாகவும், கம்பீரமாகவும் நடை போட்டு கொண்டிருந்த அதிமுக, அவர் மறைந்த பிறகு பல அணிகளாக பிரிந்தது. அதிமுகவை சேர்த்து வைக்கிறேன் என்ற பெயரில் பெரியண்ணன் மனப்பான்மையாக அடிமையாக்கி கொண்டது பாஜ.

அன்று முதல் இன்று வரை (கூட்டணியில் இருந்து வெளியேறும் வரை) பாஜ சொல்லுக்கு தலையாட்டி பொம்மை போல செயல்பட்டு மாநில உரிமைகளையும், மக்களுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. அன்று தங்களது காலை தமிழ்நாட்டில் ஊன்ற நினைத்த பாஜ, அதிமுகவை ஏணியாக பயன்படுத்தி இபிஎஸ்-ஓபிஎஸை சேர்த்து வைப்பதுபோல் சேர்த்து வைத்து சூழ்நிலைக்கு ஏற்ப இரண்டு பக்கம் கேம் விளையாடியது.

ஒரு கட்டத்தில் எடப்பாடி-ஓபிஎஸ்சுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால், தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கட்சியை கைப்பற்றினார் எடப்பாடி. ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த சூழலில் பாஜ தலைவர்கள் அதிமுகவையும், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களையும் கடுமையக விமர்சித்து வந்தனர். இதனால் ரோஷம் வந்து பாஜ கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக எடப்பாடி அறிவித்தார். அப்போது அவர் கூறியதுதான் வேடிக்கையாக இருந்தது.

மாநில உரிமைகளை காப்பாற்ற பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக எடப்பாடி தெரிவித்தார். இருந்த உரிமைகளை கொடுத்துவிட்டு, காப்பாற்ற வெளியே வந்தோம் என்று கூறுவது, ‘கேட்கிறவன் கேனையாக இருந்தால் எருமை மாடு ஏரோபிளேன் ஒட்டுச்சு என்பார்களாம்…’ நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பாஜ ஒரு கணக்கு போட்டது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் கால் ஊன்ற முடிந்த பாஜவால், தமிழ்நாட்டில் எவ்வளவு முயன்றும் அதுவும் நடக்காமல் தவியாய் தவிக்கிறார்கள்.

மெகா கூட்டணி என்று திட்டபோட்ட பாஜவுக்கு தற்போது 1 சதவீதம் வாக்கு கூட பெறாத தமாகா, புதிய நீதி கட்சி, ஜான் பாண்டியன் போன்றவர்கள் மட்டுமே கூட்டணி வைத்து உள்ளார்கள். இதனால் தனது ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதாக எண்ணும் பாஜ, அதிமுக காலிலே விழலாம் என்று எண்ணி பிரதமர் மோடி தொலைபேசி மூலம் எடப்பாடியை இழுக்க பல வழிகளை முன்னெடுத்து வருகிறார். பாமக, தேமுதிகவிடமும் பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம் என்று சொன்ன எடப்பாடியோ தேமுதிக, பாமகவுக்கு பல ஆபர்களை கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கூட்டணிக்காக யாராவது வருவார்கள் என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை குழு தவம் கிடக்கிறது. இதனால் தேர்தல் திருவிழா ஜனநாயக திருவிழா என்பது மாறி ஆட்களை இழுக்கும் திருவிழாவாக மாற்றிவிட்டனர்.

ஜெயலலிதா இருந்த காலத்தில் தேர்தல் வந்துவிட்டால், விரைவில் கூட்டணி பேசி முடிந்து வேட்பாளர்களை அறிவித்துவிடுவார். ஆனால், இன்று ஒவ்வொருத்தர் வீடு வீடாக (ராமதாஸ், பிரேமலதா வீடு, கிருஷ்ணசாமி வீடு)தேடி சென்று கூட்டணிக்கு வாங்க என்று கெஞ்சி கூப்பிட வேண்டிய பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது அதிமுக. இன்னொரு பக்கம், ‘அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதை’தான் ஓபிஎஸ், டிடிவி நிலைமை. பாஜவை நம்பி வந்த ஓபிஎஸ், டிடிவிக்கு கல்யாணம் வீட்டில் கடைசி இலையில் சாப்பிடும் நிலைதான்.

1 சதவீத ஓட்டு உள்ள தமாகா, ஏ.சி.சண்முகத்துக்கு வீட்டிற்கு சென்று கூட்டணியை உறுதி செய்த பாஜ, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை அழைத்து பேசவில்லை. இதனால் அதிமுக தொண்டர்கள் மீட்புக்குழு என்ற பெயரில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று விருப்ப மனு அளிக்கலாம். இன்றே வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என்று ஓபிஎஸ் கூறி உள்ளார். தனியாக ஒரு அலுவலகம் கூட போட முடியாமல், தனியார் ஓட்டலில் வேட்பாளர் தேர்வு செய்யும் நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுள்ளார்.

கூட்டணிக்கே பாஜ இன்னும் அழைக்காத நிலையில், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன், தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகிய 7 பேர் குழுைவ அமைத்து உள்ளார் ஓபிஎஸ். டிடிவி.தினகரனோ இதுவரை போட்டியிட விரும்பவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறுவதற்கான அறிவிப்பு கூட வெளியிடவில்லை. ‘குழந்தையே பிறக்காத நிலையில் அதுக்குள்ள பேர் வைப்பதா’.

இன்னொரு பக்கம் பாஜவில் கூட்டணி சேர்ந்து உள்ள தமாகா ஜி.கே.வாசன் கூட்டணி குறித்து பேச 6 பேர் குழுவை அமைத்து உள்ளார். இதேபோல், பாஜவும் 7 பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளது. அனைத்து பக்கமும் சீட் பேரம், தேர்தல் செலவுக்கான பண பேரம் என பல பேரங்கள் ரகசியமாக நடந்து வரும் நிலையில் எதற்கு இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

தோல்வி உறுதி என்பதால் வேட்பாளர்களும் போட்டியிட யாரும் ஆர்வம் காட்டாததால் அதிமுக, பாஜ, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள், ‘எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன்…’தலையில் துண்டை போட்டு காத்திருக்கின்றனர். இதை பார்க்கும் போது ‘உன்னை சொல்லி குற்றமில்லை… என்னை சொல்லி குற்றமில்லை… காலம் செய்த கோலமடி…’ என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

* ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆதங்கம்
‘பாஜ கூட்டத்திற்கு ஏன் அழைக்கவில்லை என்றால், விருந்தாளிகளுக்கு தான் முதலில் சாப்பாடு போடுவார்கள். மிச்சம் மீதி இருந்தால் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவார்கள். நாங்கள் பாஜ வீட்டிலே தான் இருக்கிறோம்’ என்று பண்ருட்டி ராமச்சந்திரன் டயலாக் பேசினார். ஆனால், பாஜ டெல்லி தலைவர்களோ, மாநில தலைவர்களோ ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. போகாத ஊருக்கு வழி சொல்வது, ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஓபிஎஸ் கதை உள்ளதாக மக்கள் கிண்டல் செய்கின்றனர். இனியாவது ஓபிஎஸ் விழித்துக்கொள்ள வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களே கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

The post உன்னை சொல்லி குற்றமில்லை… என்னை சொல்லி குற்றமில்லை… காலம் செய்த கோலமடி: கூட்டணிக்காக நடக்கும் ரகசிய பேரங்கள் appeared first on Dinakaran.

Tags : Kalamadi Kolamadi ,Koothadi ,AIADMK ,BJ ,Jayalalithaa ,Kolamadi ,Kalamadi ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...