×

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை தாண்டியது

சென்னை: தங்கம் விலை கடந்த மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,105க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,840க்கும் விற்கப்பட்டது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் நேற்றும் தங்கம் விலை அதிகரித்து நேற்று முன்தின சாதனை முறியடிக்கப்பட்டது.

அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6150க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200க்கும் விற்பனையானது. அது மட்டுமல்லாமல் தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையையும் படைத்தது. மேலும் 29ம் தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.2,720 உயர்ந்துள்ளது. இந்த அதிரடி விலை ஏற்றம் நகை வாங்குவோருக்கு தினம், தினம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இப்படியே தங்கம் விலை அதிகரித்தால் ஓரிரு நாளில் சவரன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடும் என்ற அச்சமும் நகை வாங்குவோரிடையே இருந்து வருகிறது. இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:உலக பொருளாதாரத்தில் தங்கத்தின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படும் போதும், பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்கும் போதும், பங்கு சந்தையில் தாக்கம் ஏற்படும் போதும் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும். இது போன்ற சூழ்நிலை நீடித்தால் ஒரு சவரன் ரூ.50 ஆயிரத்தை தாண்டவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும்.

The post தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் ஒரு சவரன் ரூ.49 ஆயிரத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...