×

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை எதிரொலி: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு

* பண்ணை வீட்டில் இருந்து ஓட்டம் கைது செய்ய சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021 பிப்ரவரி 21ம் தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்கும் பணியில் அப்போதைய சட்டம் – ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது பாதுகாப்பு ஆலோசனை என்ற பெயரில் பெண் எஸ்.பியை முன்னாள் சிறப்பு டிஜிபி காரில் அழைத்துச் சென்றபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. இதுபற்றி தமிழக அரசின் உள்துறை செயலாளர் மற்றும் அப்போதைய காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக ராஜேஷ்தாஸ் மற்றும் அவரது உத்தரவின்படி பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி கண்ணன் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி விசாரித்து ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், ராஜேஷ்தாசுக்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்தார். இதைதொடர்ந்து. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தண்டனையை நிறுத்தி வைக்கவும், தீர்ப்புக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டன.

இந்நிலையில், தான் எப்போது வேண்டுமானாலும் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என தகவல் அறிந்த ராஜேஷ் தாஸ் 2 வாரங்களுக்கு முன்பே தையூரில் உள்ள வீட்டில் இருந்து தலைமறைவானார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் 6 பேர் அடங்கிய குழுவினர், தையூர் கிராம விஏஓ செண்பகவல்லியுடன் நேற்று பகல் 11.30 மணிக்கு சென்னை அருகே கேளம்பாக்கத்தை அடுத்துள்ள தையூர் கோமான் நகர் பகுதியில் உள்ள ராஜேஷ்தாசுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, பணியில் இருந்த காவலாளி நர் பகதூர் மற்றும் தோட்ட பராமரிப்பாளர் மேகலா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 வாரங்களாக ராஜேஷ்தாஸ் இந்த பண்ணை வீட்டிற்கு வரவில்லை, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பண்ணை வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு வேறு யாரும் இல்லாததால் திரும்பிச்சென்றனர். இதனால் அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் சொந்த ஊருக்கும் தனிப்படை செல்ல திட்டமிட்டுள்ளனர்.

The post பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை எதிரொலி: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : DGP ,RAJESH DAS ,Chennai ,
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...