×

2024 – 2025ம் கல்வியாண்டிற்கு இதுவரை அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: 2024 – 2025ம் கல்வியாண்டிற்கு இதுவரை அரசுப் பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவ- மாணவிகள் சேர்க்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். ஆனால், அதற்கு முன்னதாக தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து விடுவதால், பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேருவது வழக்கம்.

இந்நிலையில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், நடப்பு கல்வியாண்டு முதல் மார்ச் மாதத்திலேயே மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் அரசுப் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித் துறையும் பல்வேறு திட்டங்கள், வசதிகளை கொண்டு வந்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வரும் கல்வியாண்டில் இருந்து அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நுட்ப ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்பட இருக்கிறது.

இதுபோன்ற வசதிகள், அரசு பள்ளி மாணவ-மாணவி களுக்கு கிடைக்கக் கூடிய நலத்திட்டங்கள், பயன்கள் ஆகியவற்றை எடுத்துக் கூறி விழிப்புணர்வு மேற்கொண்டு மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களி லும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 2024 – 2025ம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அனைவரையும் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி முதல் 8ம் தேதிவரை தமிழகம் முழுவதும் மொத்தமாக அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. நேற்று வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவர்களும், சேலம் மாவட்டத்தில் 7,890 மாணவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,770 மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 4,228 மாணவர்களும், திருச்சி மாவட்டத்தில் 3,012 மாணவர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 2,152 மாணவர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,953 மாணவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் 3,801 மாணவர்களும், மதுரையில் 2,482 மாணவர்கள் என சேர்க்கை நடைபெற்றுள்ளது.

The post 2024 – 2025ம் கல்வியாண்டிற்கு இதுவரை அரசு பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Department of School Education ,Chennai ,School Education Department ,Tamil Nadu School Education Department ,Education Department ,Dinakaran ,
× RELATED 24 முதல் 26ம் தேதி வரை செயல்படும் பள்ளிகளுக்கு 26ம் தேதி கடைசி பணிநாள்