×

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனரூ.46 லட்சம் மோசடி: காஞ்சிபுரம் அருகே 3 பேர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் என ஆசைவார்த்தை கூறி உறவினரிடம் ரூ.46 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் சித்தாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி கிரிஜா. இவர்கள், தங்கள் உறவினரான காஞ்சிபுரம் அடுத்த அப்துல்லாபுரம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும். 1 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 ஆயிரம் ரூபாய் வரை வட்டி தருவதாக கூறியுள்ளனர்.

இதை நம்பிய விஸ்வநாதன், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் செயல்படும் அலுவலகத்துக்கு வந்து, மனோகரன், கிரிஜாவிடம் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் 4 மாதத்தில் பல்வேறு தவணைகளில் ரூ.66 லட்சம் வரை கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி பணம் கொடுக்காமல் 20 லட்ச ரூபாய் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளனர். இதனால் மொத்த பணத்தையும் தரும்படி விஸ்வநாதன் தம்பதியிடம் கேட்டுள்ளார்.

இதற்கு அவர்கள், நீங்கள் தந்த பணத்தை வேறு நபரிடம் முதலீடு செய்துள்ளோம். அவர் தந்தால் உங்களிடம் பணத்தை தந்துவிடுகிறோம் என கூறியுள்ளனர். கிரிப்டோ கரசின்யில் முதலீடு செய்த பணத்தை திருப்பிகொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் விஸ்வநாதன் புகார் அளித்துள்ளார்.

புகாரின்அடிப்படையில், மாவட்ட எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி மணிமேகலை அறிவுறுத்தல்படி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மனோகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வங்கிக்கணக்கில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் நம்பிக்கை மோசடி செய்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து 2 பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனுக்கு உடந்தையாக இருந்த கிரிஜா, மனோகரனின் தந்தை மதியழகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

The post கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணம் கிடைக்கும் எனரூ.46 லட்சம் மோசடி: காஞ்சிபுரம் அருகே 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Kanchipuram ,Kanchipuram ,Thiruvannamalai District ,Vembakkam Circle Chittathur ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...