லக்னோ: வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடும் என்று அந்த கட்சியின் தலைவர் மாயாவதி மீண்டும் அறிவித்துள்ளார். விரைவில் நடைபெற இருக்கிற நடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 28 கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி மற்றும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன. ஆனால், பாரதிய ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த 2 கூட்டணிகளிலும் இடம்பெறாமல் தனித்து களம் காண்கின்றன.
இந்தநிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலங்கானாவில் பாரதிய ராஷ்டிரிய சமிதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகரராவ் மற்றும் தெலங்கானா மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார்ஆகியோர் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சந்திரசேகரராவ் மேலும் கூறுகையில், ‘தெலங்கானாவில் தலித்துகள் மற்றும் பிற மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம்.
நாங்கள் கொண்டுவந்த தலித் பந்து போன்ற திட்டங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. இதுபோன்ற பல்வேறு விஷயங்களில் இரு கட்சிகளுக்கும் (பிஆர்எஸ் – பிஎஸ்பி) இடையே கருத்தியல் ரீதியாக ஒற்றுமை உள்ளது. தொகுதி பங்கீடு தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியிடம் விரைவில் பேச உள்ளேன்,’என்று கூறியிருந்தார்.இந்தநிலையில் பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா முழுவதும் தனித்து போட்டியிடும் என்றும் யாருடனும் கூட்டணி இல்லை என்று அந்த கட்சியின் தலைவர் மாயாவதி திட்டவட்டமாக இன்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது எக்ஸ்தள பக்கத்தில், ‘இந்தியா முழுவதும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட உள்ளது. இதில், எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக உ.பி.யில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுவதால், எதிர்க்கட்சிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். அதனால்தான் அவர்கள் தினமும் பல விதமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். ஆனால் தலித் மக்களின் நலன் கருதி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போடியிடும். இந்த முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,’என்று அதில் கூறியிருந்தார்.
The post எதிர்க்கட்சிகளின் வதந்திகளை நம்ப வேண்டாம் நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டி: மாயாவதி மீண்டும் திட்டவட்டம் appeared first on Dinakaran.