×

திருப்பதியில் 8 சிலைகள் திறப்பு பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்

*எம்எல்ஏ பேச்சு

திருமலை : திருப்பதியில் 8 பெண்கள் சிலையை எம்எல்ஏ கருணாகர் திறந்து வைத்து, பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் என பேசினார்.
திருப்பதி பத்மாவதி மகிளா பல்கலைக்கழகம் அருகே உப்பரப்பள்ளேக்கு செல்லும் சாலை சந்திப்பில் திருப்பதி மாநகராட்சியால் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 8 பெண் சிலைகள் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திருப்பதி எம்எல்ஏ பூமண கருணாகர் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்து பேசுகையில், ‘பெண்களுக்கு உரிய முன்னுரிமை அளித்து வாய்ப்பளிப்பதால் அனைத்து துறைகளிலும் முன்னிலை வகித்து வருகின்றனர்.

முதல்வர் ஜெகன் மோகன் நம் மாநிலத்தில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, பெண்களுக்கு அனைத்து வகையிலும் ஊக்கம் அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, நாட்டை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதில் சிறந்த திறமையை பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்’ என பேசினார்.

அதைத்தொடர்ந்து, திருப்பதி மாநகராட்சி மேயர் சிரிஷா, கமிஷனர் அதிதி சிங் ஆகியோர் இணைந்து கூறுகையில், ‘சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன் கள பணியாளர்களாக விளங்கும் 8 பெண்களின் சிலைகளை திறப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக ₹80 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் சிலை நிறுவி திறக்கப்பட்டுள்ளது’ என கூறினர். இதனையடுத்து சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, மேயர் சிரிஷா, கமிஷனர் அதிதி சிங், வி.சி.பாரதி, பதிவாளர் ரஜனி, ஒய்.சி.பி.கட்சி தலைவர் கீதா ஆகியோருக்கு எம்எல்ஏ கருணாகர் சால்வை அணிவித்து கவுரவித்தார். இந் நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் சரண் தேஜ், கண்காணிப்பு பொறியாளர் மாலிகா மோகன், நகராட்சி பொறியாளர் சந்திரசேகர், டி.இ.மகேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பதியில் 8 சிலைகள் திறப்பு பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,MLA ,Tirumala ,Karunakar ,Tirupati Municipal Corporation ,Upparapalle ,Padmavathi Mahila University ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...