×

கனவுத் தொல்லை நீக்கும் நீலப் பசுமணி

நீலமும் பசுமையும் கலந்த `அமேசானைட்’ என்ற ரத்தினம் இதயச் சக்கரத்திற்கு உரியதாகும். இந்த ரத்தினத்தைத் தங்க நகையில் பதித்து அணிந்தால், கனவுத் தொல்லை விலகும். மனம் அமைதி பெறும். ஆன்மிக சிந்தனை பெருகும். அன்பும், காதலும் பெருக்கெடுக்கும். மனம் தெளிவாகவும், சிந்தனை குழப்பம் இன்றியும் இருக்கும். நினைவுகள் தென்றல் காற்றைப்போல சுகமாக தவழும்.

கன்னி ராசியின் கனவு ரத்தினம்

அமேசானைட் என்பது தினமும் அணியக்கூடிய ஓர் அற்புதமான ரத்தினம் ஆகும். இந்த ரத்தினம் மின்காந்த சக்தி களின் ஆபத்தான விளைவுகளில் இருந்து காப்பாற்றும். இதனை, `அமேசான் ரத்தினம்’ என்றும் `அமேசான் ஜேடு’ என்றும்கூட அழைப்பதுண்டு. அமேசானைட் புதன் கிரகத்திற்குரிய ரத்தினம் ஆகும். எனவே, கன்னி ராசிக்காரர்களுக்கு ஒரு அதிர்ஷ்ட ரத்தினமாக அமேசானைட் விளங்குகிறது. கன்னி ராசி தவிர, கும்ப ராசிக்காரர்களும் அமேசானாய் ரத்தினத்தை அணியலாம்.

அதிர்ஷ்டத்துக்கு அமேசானைட்

வீட்டில் அமேசானைட்டால் செய்த பிரிசம் வைப்பதும் வீட்டில் ஆக்க சக்தி பெருகுவதற்கும், தூய சக்தி தங்குவதற்கும் உதவும். ஒருவருக்கு திடீர் அதிர்ஷ்டம் வரவும் திடீர் பணயோகம் வரவும் இந்த ரத்தினம் உதவும். சிலர் தன்னை அதிர்ஷ்டக் கட்டை என்று கூறுவார்கள்.

நீலப் பசுமணியின் இயல்பு

அமேசானைட் என்ற நீலப்பசுமணி இருட்டிலும் ஜொலிக்கும் தன்மை உடையது. வைரம்கூட வெளிச்சம் பட்டால்தான் அவ்வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும். ஒளி இல்லாத இடத்தில் வைரம் இருப்பதே தெரியாது. ஆனால், அமேசானைட் இருட்டிலும் ஒளி வீசும். இந்த ரத்தினம் அமேசான் நதிக்கரையில் அதிகம் கிடைத்ததால் அதற்கு அமேசானைட் என்று பெயர் சூட்டினர். தற்போது பிரேசில், மடகாஸ்கர், பாகிஸ்தான், கொலரோடா மற்றும் இந்தியாவிலும் கிடைக்கின்றது. பொட்டாசியம், அலுமினியம் சிலிகேட் அதிகம் இருப்பதால் இக்கல் பச்சையும் நீலமும் கலந்து ஒளிர்கிறது. இந்த ரத்தினம் வெளிறிய பச்சை, நீலம் கலந்த பச்சை, அடர் நீலம், நீலமும் பசுமையும் கலந்த கடல் நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கும். இந்த ரத்தினத்தை பெண்கள் அதிகம் விரும்பி வாங்கி அணிகின்றனர். வெகு அரிதாக வெள்ளை நிறத்தில் அல்லது புகை நிறத்தில் அமேசானைட் கிடைக்கின்றது.

நல்ல உறக்கத்துக்கு…

தூக்கமின்மை இன்று பலரையும் தாக்கியுள்ள ஒரு தொல்லை. இரவில் தூக்கம் வரவில்லை, தூங்கினாலும் 2,3 மணிநேரத்தில் விழிப்பு வந்துவிடுகிறது. பின்பு தூக்கம் வருவதில்லை என்போர் இந்த ரத்தினத்தை தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளலாம். நல்ல தூக்கம் வரும். அல்லது கட்டிலின் அருகில் ஒரு மேசையின் மீது வைக்கலாம்.
உறக்கத்திற்கு மிகவும் உதவும்.

கனவுத் தொல்லை நீங்க…

இரவில் கெட்டகனவு, தீய கனவுகள் மற்றும் கொடுமையான கனவுத் தொல்லையிலிருந்து விடுபட அமேசானைட் அணியலாம். சிலருக்கு, தாம் கண்ட கனவின் அர்த்தம் தெரியாமல் குழம்பிப் போவார்கள். கண்ட கனவின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளவும் அமேசானைட் உதவும். அமேசானைட் அணிந்தவர்களுக்கு கெட்ட கனவுகள் வராது. கனவு வந்தாலும், அதன் அர்த்தம் என்ன என்பது அவர்கள் மனதுக்கு புரியும். கனவு கண்டால் மீண்டும் நல்ல ஆழ்ந்த தூக்கம் அவர்களை அரவணைக்கும்.

அமேசானைட்டுக்கு சக்தியேற்றுவது எப்படி?

தினமும் காலை வேளையில் 6 முதல் 7 மணி வரை இளம் வெயிலில் வைத்திருந்து விட்டு, அணிந்துகொண்டால் இதன் செயல்பாடு அற்புதமாக இருக்கும். சூரியன் இருக்கும் திசைக்கு இடது
பக்கம் வைத்து எடுக்க வேண்டும். பட்டுத் துணியில் சுற்றி பூமிக்குள் 24 மணி நேரம் புதைத்து வைத்து எடுத்தாலும், இந்த ரத்தினம் கூடுதலாக ஆற்றல் தரும்.

குரல் வளம் பெருக…

அமேசானைட் பேச்சாளருக்கும், பாடகருக்கும் வெற்றி தரும் ரத்தினம் ஆகும். தைராய்டு நோயாளிகள் அமேசானைட் அணிவதால் நன்மைகள் கிடைக்கும். குரல் வளத்தைக் கொண்டு தொழில் செய்யும் பேச்சாளர், வக்கீல், ஆசிரியர், பிரசங்கியார் போன்றவர்களும்
அமேசானைட் அணியலாம்.

நோய் தானாக சுகமாகும்

அமேசானைட் அணியும் ஒவ்வொருவருக்கும் மனக்குழப்பம் தீர்ந்து மனம் அமைதி அடைவதால், நிம்மதியும் சந்தோசமும் கிடைக்கும். ஏதேனும் நோய் தொற்று ஏற்பட்டால் மருந்துகள் எடுத்துக் கொள்ளாமலேயே மனிதர்களுக்கு இயற்கையாகவே உடம்பு சரி ஆகிவிடும் சக்தி உள்ளது. இயற்கையாக சுகம் அளிக்கும் சக்தி நம் உடம்பிலேயே இருக்கின்றது அதற்கு உறுதுணையாக இருக்கக்கூடியது அமேசானைட் ரத்தினம் ஆகும்.

ரத்தினத்தை சுத்தம் செய்வது எப்படி?

அமேசானைட்டை ஓடுகின்ற நீரில் சில நிமிடங்கள் காட்டிவிட்டு தூய்மையான பட்டுத் துணியால் துடைக்கலாம். உப்புத் தண்ணீரில் ஓர் இரவு மூழ்க வைத்துவிட்டு மறுநாள் எடுத்து ஓடும் தண்ணீரில் கழுவித் துடைத்து அணிந்து கொள்ளலாம். யாரேனும் ஆன்மிகப் பெரியவர் கையில் கொடுத்து வாங்கலாம். துளசிக்கு மத்தியில் ஒரு நாள் அல்லது ஓர் இரவு நிலவொளியில் வைத்திருந்து, மறுநாள் எடுத்து அணியலாம். காலை இளம் சூரிய வெளிச்சத்திலும் முழுமதி பௌர்ணமி நிலவிலும் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து அணிவதால், இந்த ரத்தினத்திற்கு கூடுதல் சக்தி கிடைக்கும். அமேசானைட் ரத்தினத்தை பெண்கள் அதிகம் விரும்புவதால், காதணி, கழுத்தணி, வளையல், மோதிரம் என்று பல வகையான ஆபரணங்களிலும் இந்த நீலப்பசுமணியை பதித்து அணிகின்றனர்.

தொழில் பேச்சுவார்த்தையால் லாபம் பெற…

புதன்கிழமை இந்த ரத்தினத்தை அணிவதால், மிகுந்த நற்பலன் கிடைக்கும். தொழில் தொடர்பான சந்திப்புகளை புதன்கிழமை வைத்துக் கொண்டு இந்த ரத்தினம் பதித்த நகைகளை விரல், கழுத்து, கைகளில் அணிந்தபடி பேச்சுவார்த்தையை நடத்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அத்தொழில் ஒப்பந்தம் மிகச் சிறப்பான லாபத்தை தரும்.

ரத்தினங்களின் சேர்க்கை

இந்த ரத்தினத்துடன் `லேப்பிஸ் லஜூலி’, `சந்திரா காந்தம்’, `அக்வாமரைன்’ போன்ற ரத்தினங்களைச் சேர்த்து நகை செய்து அணியலாம். இதனால் புதனின் ஆற்றல் மிகும். சந்திரனும் மன அமைதியைக் கூடுதலாக வழங்கும்.

யாருக்கு உரியது?

ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 22 வரை பிறந்தவர்களுக்கு உரிய ரத்தினம்
அமேசானைட் ஆகும். மேலும், மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசிக்காரர்கள் இந்த ரத்தினத்தை அணிவதால், சிறந்த பலன் பெறுவார்கள். உடல் குளிர்ச்சி பெறும். மனம் சாந்தம் அடையும்.

 

The post கனவுத் தொல்லை நீக்கும் நீலப் பசுமணி appeared first on Dinakaran.

Tags : Neela Pashumani ,Neela Pasumani ,
× RELATED திருவருட்பாவில் தந்தை மகன் உறவு