×

கடையம் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம்

*தென்னை, பனை மரங்கள் நாசம்

கடையம் : கடையம் அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்து வருகிறது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, கரடி, மிளா, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தப்படுத்துவது மட்டுமின்றி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் தங்களது விளைநிலங்களுக்கு பகல் நேரங்களில் கூட செல்ல விவசாயிகள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கருத்தபிள்ளையூரில் நேற்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் காட்வின் ராஜா என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இரண்டு மாமரங்கள் மற்றும் 20 பனை மரங்களையும், வேலி கற்களையும் சேதப்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் தோட்டத்தில் நான்கு தென்னை மரங்களையும், ஒரு பலா மரத்தையும் யானைகள் சேதப்படுத்தி சென்றுள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் யானைகள் புகுந்து தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவருங்காலங்களில் யானைகள் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post கடையம் அருகே காட்டு யானைகள் மீண்டும் அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : Katayam ,Kadayam ,Western Ghats ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...