×

ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த ₹4 லட்சம் மதிப்பிலான மணல் பறிமுதல் : 3 பேர் கைது

கும்மிடிப்பூண்டி, மார்ச் 9: கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் ஆந்திராவில் இருந்த லாரி மூலம் கடத்தி வந்த சுமார் ₹4 லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேரை கைது செய்துள்ளனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட ஆரம்பாக்கம், பாதிரிவேடு, கும்மிடிப்பூண்டி, சிப்காட், கவரப்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களை சார்ந்த போலீசார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மேற்கண்ட சோதனை சாவடி வழியாக ஆந்திரா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், பீகார், ஒரிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், உணவு பொருட்கள், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் என பல்வேறு பொருட்களை ஏற்றி கொண்டு தமிழ்நாடு எல்லையான எளாவூர் சோதனைச் சாவடி வழியாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொண்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஆந்திரா – தமிழ்நாட்டிற்கு, செம்மரக்கட்டை, கஞ்சா, மணல் அபின் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் தமிழகத்திற்கும் கடத்தப்படும் நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிவேகமாக வந்த மூன்று லாரிகளை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த, லாரியில் ஆற்று மணல் இருந்தது உறுதியானது. பின்பு ஆற்று மணலை பறிமுதல் செய்த ஆரம்பாக்கம் போலீசார், மணல் கடத்திய உளூந்தூர்பேட்டையை சேர்ந்த சந்தோஷ்குமார்(22), சத்யநாராயணன்(30), கொளத்தூரைச் சேர்ந்த முத்து(54) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுமார் 36 யூனிட் மணல் இருந்ததாகவும், இதன் மதிப்பு சுமார் ₹4 லட்சம் என கூறப்படுகிறது.

The post ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த ₹4 லட்சம் மதிப்பிலான மணல் பறிமுதல் : 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Kummidipoondi ,Elavoor Integrated Checkpost ,Elavoor ,
× RELATED எளாவூர் ஒருங்கிணைந்த...