×

போராட்டம், கலவரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிநவீன கருவிகளுடன் 4 நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: போராட்டம், பொதுக்கூட்டங்கள், கலவரங்கள் நடைபெறும் பகுதியில் நேரடியாக சென்று வீடியோ பதிவுகளுடன் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அதிநவீன கருவிகளுடன் 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டிஜிபி சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அந்த வகையில், கொகா சிட்டி திட்டம் ரூ.93.50 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1,030 இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துடன் நிறுவப்பட்ட 3,090 ஏஐ மூலம் இயங்கும் சிசிடிவி கேமராக்கள், 753 வாகன கண்காணிப்பு சாதனங்கள், 7 வான்வழி கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் 7 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வானங்கள் மூலம் நகரம் முழுவதும் விரிவாக கண்காணிக்க முடிவும்.

அதன் முதற்கட்டமாக 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் வாகனங்களை காவல்துறை பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள 4 நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள் சென்னை முழுவதும் கண்காணிப்புக்காக பயன்படுத்தப்பட உள்ளது. நகரம் முழுவதும் உள்ள 2,250 கேமராக்கள் மற்றும் 650 ரோந்து வாகனங்கள் இருக்கும் இடங்கள் நேரங்களை தானியங்கி வாகன இருப்பிடத்தில் இருந்து அறிந்து கொள்ள முடிவும். அதோடு இல்லாமல், ஒரு இடத்தில் நடைபெறும் சம்பவத்தை இந்த நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள டிரோன்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் மூலம் நேரடியாக வீடியோ பதிவுகள் செய்து, அதை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உடனே தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், நகரம் முழுவதும் முக்கிய பொதுகூட்டங்கள், போராட்டங்கள், சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்படும் இடங்களில் நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மைய வாகனத்தை நிறுத்தி, சம்பவத்தை நேரடியாக வீடியோ பதிவு செய்து அதற்கு ஏற்றப்படி நடவடிக்கை எடுக்க இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும். இந்த அதி நவீன வாகனத்தில் 2 நைட் விஷன் டிரோகள், ஒலி பெருக்கி, போக்குவரத்து நெரிசலை கண்காணித்து சரி செய்யும் சாதனங்கள், அவசர காலங்களில் திறமையான தகவல் தொடர்பு கருவிகள் உள்ளன.

The post போராட்டம், கலவரத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அதிநவீன கருவிகளுடன் 4 நடமாடும் கட்டுப்பாட்டு மைய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu Police ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...