×

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜை

மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கோயிலில் மும்முரமாக நடந்து வருகின்றன.மதுரை மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு கோயில்களில் இன்று மாலை நடை திறக்கப்பட்டு, அங்கு 4 கால பூஜைகள் நடத்தப்பட்ட உள்ளன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடத்தப்படுகிறது. பொதுமக்கள் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேசுவரருக்கு இன்று மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நாளை அதிகாலை வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. சுந்தரேஸ்வருக்கு இன்று இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரை முதல்கால பூஜையும், 11 மணிக்கு 2ம் கால பூஜை தொடங்கி 11.40 மணி வரையும், 3ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 12.40 மணி வரையும், 4ம் கால பூஜை நாளை அதிகாலை 1 மணிக்கு தொடங்கி, 1.40 மணி வரையிலும் நடக்கிறது.

சுவாமி சன்னதியில், முதல் கால பூஜை இரவு 11 மணிக்கு தொடங்கி 11.45 மணி வரையிலும், 2ம் கால பூஜை இரவு 12 மணிக்கு தொடங்கி 12.45 மணி வரையிலும், 3ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.45 மணி வரையிலும், 4ம் கால பூஜை 2 மணிக்கு தொடங்கி 2.45 மணி வரையிலும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாமபூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடக்கிறது.

சரவணப் பொய்கையில் சர்வ பூஜை: மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகில் உள்ள சத்தியகிரீசுவரருக்கு பிரதோஷ வழிபாடு நடக்கிறது. இரவு 9.30 மணியளவில் முதல்கால பூஜை நடந்தது. தொடர்ந்து 4 கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது. இதேபோல் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்கனை கண்ட சிவ பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் நடைபெறுகிறது. சிவபெருமான் ருத்ராட்சம், நாகபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுடன் காட்சி தருவார். சரவணப்பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வ பூஜைகள் நடக்கிறது.

சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு: மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயில், தெப்பக்குளம் முக்தீசுவரர் கோயில், சிம்மக்கல் சொக்கநாதர் கோயில், தெற்குவாசல் தென்திருவாலவாய சுவாமி கோயில், செல்லூர் திருவாப்புடையார் கோயில், திருவாதவூர் திருமுறை நாதர் சுவாமி கோயில், ஆமூர் ஐம்பொழில் ஈஸ்வரன் கோயில், சோழவந்தான பிரளயநாதர் கோயில், திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயில், மன்னாடிமங்கலம் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில், சோழவந்தான் பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் உள்பட பல்வேறு சிவாலயங்களில் திருவிளக்கு பூஜையும், சங்கு அபிஷேகமும் நடைபெறுகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் பக்தர்களுக்கு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களில் வழிபாடுகள் நடக்கிறது. பக்தர்கள் இன்று அதிகாலையிலே முதலே குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து தங்கி இருந்து விடிய, விடிய பூஜைகள் நடத்தி சிவபெருமானை வழிபட உள்ளனர். இதனால், மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இன்று இரவு முழுவதும் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.

Tags : Maha Shivratri ,Madurai Meenakshiyamman temple ,Madurai ,Meenakshiyamman ,Shivratri ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயில்...