×

திருவிழாக்கள், பண்டிகைகள் இல்லாததால் வாழை இலை, தார் விலை கடும் வீழ்ச்சி

* விவசாயிகள் கவலை

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டத்தில் வாழை இலை, தார் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, சாத்தனூர், வடுகக்குடி, ஆச்சனூர், வளப்பகுடி, திருக்காட்டுப்பள்ளி, கண்டியூர், மேல உத்தமநல்லூர் போன்ற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக காவேரி ஆறு, குடமுருட்டி, வெண்ணாறு போன்ற படுகை பகுதியில் சுமார் 10,000 ஹெக்டருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதில் 25 ஆயிரம் ஏக்கருக்குமேல் இலைக்காகவே வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் வாழை இலை சென்னை, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு இலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. வியாபாரிகள் நேரடியாக வந்து இவற்றை வாங்கிச் செல்கின்றனர். பொதுவாக வாழை இலை ஆண்டு முழுவதும் அறுவடை செய்ய முடியும். இப்பகுதியில் விளையும் ஒரு இலை 10 அடி நீளம் வரை இருக்கும்.

பொதுவாக வாழை ஓராண்டு பயிராகும். ஏக்கருக்கு ஆயிரம் வாழைக்கன்றுகளை நடவு செய்யலாம். உற்பத்தி செய்ய சுமார் 2 லட்ச ரூபாய் வரை செலவாகும். நல்ல விலைக்கு விற்றால் கணிசமான லாபம் கிடைக்கும். விலை வீழ்ச்சி, இயற்கை இடர்பாடுகளால் நஷ்டமே ஏற்படும். நடப்பாண்டு பருவமழை தவறி பெய்ததால் நிலத்தடி நீர்மட்டமும் இயற்கை சூழலும் மாறி போனதால் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்கள் முகூர்த்த தேதி, திருவிழாக்கள் இருந்ததால் ஓரளவு இவை விற்பனையானது. தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

கடந்த சில மாதங்கள் ஓரளவு விலை கிடைத்ததால், குடும்பத்திற்கும், பயிருக்கும் செலவு செய்து ஈடு செய்து வந்தோம். ஒரு இலை ரூ.3 முதல் 5 ரூபாய் வரை விலை போகும். ஆனால் தற்போது வாழைத்தார், வாழை இலை, விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு ரூபாய்க்குதான் தற்போது விற்பனையாகிறது. தற்போது தண்ணீரின்றி வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீரை விலைக்கு வாங்கி பாய்ச்சுவதால் கூடுதல் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

கூடுதலாக செலவு ஆவதால் போட்ட முதல் எடுப்பதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த காலங்களில் பிளாஸ்டிக் பைக் தடை விதித்து நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது இந்த நடைமுறைகளில் தளர்வு ஏற்பட்டு அனைத்து உணவகங்களிலும் பிளாஸ்டிக் பை பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

இது குறித்து உடனடியாக ஆய்வு செய்து இவற்றின் பயன்பாட்டை தடுத்தால் வாழை பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் கெமிக்கல் பயன்படுத்தி வியாபாரிகள் பழுக்க வைப்பதால் பொதுமக்கள் வாழைப்பழம் சாப்பிடுவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இவ்வாறு செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர் தலைவாழை இலை

பொதுவாக தமிழ்நாட்டில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் திருச்சி, கரூர் மற்றும் திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிக அளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதில் நேந்திரன், பூவன் உள்ளிட்ட வாழை ரகங்கள் கேரளாவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் இலைக்காகவே காலங்காலமாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இதனால்தான் தஞ்சாவூர் தலைவாழை இலை என்று தஞ்சை மாவட்ட வாழை இலைக்கு சிறப்பு பெயர் வந்தது.

The post திருவிழாக்கள், பண்டிகைகள் இல்லாததால் வாழை இலை, தார் விலை கடும் வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Thanjavur district ,Tiruvaiyaru ,Chatanur ,Vadukakudi ,Achanur ,Valapagudi ,Thirukkatupalli ,Kandiyur ,Mela Uttamanallur ,Kaveri river ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...