*நாளை பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன்
வேலூர் : வேலூர் பாலாற்றுக்கரையில் பலத்த பாதுகாப்புடன் மயான கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது. நாளை பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.வேலூரில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி தினத்தின் மறுநாள் மாலை மயான கொள்ளை திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று மகா சிவராத்திரியும், நாளை மயான கொள்ளை திருவிழா நடக்க உள்ளது. இந்த விழாவையொட்டி வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே பாலாற்றுக்கரையில் பிரமாண்ட சிலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் தேர்கள் தயார் செய்யும் பணி தொடக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்ல உள்ளனர். ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு செல்ல உள்ளனர். பலர் காளியம்மன் போல வேடமிட்டும், கையில் சூலாயுதம் ஏந்திச் செல்லவார்கள்.
நேர்த்திக்கடன் செலுத்த பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடியும், சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்குள்ள மயானத்தை அடையும்.
இதற்கிடையில் பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கு சென்று படையிலிட்டு சாமி கும்பிடுவது வழக்கம். அதற்கான சமாதிகளையும் சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவிதத்னர்.
The post வேலூர் பாலாற்றுக்கரையில் பலத்த பாதுகாப்புடன் மயான கொள்ளை திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.