×

இடைப்பாடியில் டூவீலர்கள் மோதி விபத்து கரூர் வியாபாரி உள்பட 2 பேர் சாவு

*பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

இடைப்பாடி : இடைப்பாடி அருகே டூவீலர்கள் மோதிக் கொண்ட விபத்தில், கரூர் வியாபாரி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். அடிக்கடி விபத்து நடைபெறும் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து உயிர்பலியை தடுக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கரூர் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன்(55). இவர் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

சேலம் மாவட்டம், இடைப்பாடியில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்ததற்கான தொகையை, தவணை முறையில் வசூலித்து வந்துள்ளார். நேற்று காலை, இடைப்பாடி அருகே ஆலமரத்துக்காடு பிரிவு ரோட்டில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சாமுண்டி வளைவு பகுதியில் திரும்ப முயன்றபோது, அவ்வழியாக போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் வெங்கடேஷ்(25) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், விஸ்வநாதன் ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே விஸ்வநாதன் உயிரிழந்தார். படுகாயமடைந்த வெங்கடேஷ், முதலுதவி சிகிச்சைக்கு பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனிடையே, விபத்து நடந்த ஆலமரத்துக்காடு பிரிவில் மக்கள் திரண்டனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால், வேகத்தடை அமைத்து உயிர்பலியை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின் பேரில், இடைப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வெங்கடேஷ், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post இடைப்பாடியில் டூவீலர்கள் மோதி விபத்து கரூர் வியாபாரி உள்பட 2 பேர் சாவு appeared first on Dinakaran.

Tags : Karur ,Ethapadi ,Eepadadi ,Edepadi ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...