×

சிவராத்திரியும் தாழம்பூவின் கதையும்!

பின்னாளில் தோன்றி பல சிவராத்திரி புராணக்கதைகளில், தாழம்பூவின் கதையும் இடம்பெற்றுள்ளன. அருணகிரிபுராணம், சிவமகாபுராண உத்தரபாகம், கந்தபுராண உத்தரபாகம் ஆகியவற்றில் தாழம்பூ பொய்சாட்சி சொன்ன கதை சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், அடிமுடியே காணமுடியாத இறைவனின் வடிவத்தில், தாழம்பூ இருந்து விழுமாயின், அந்தப்பூ இருந்த இடம், உச்சி என்றும் அது ஒரு வரையறைக்கு உட்பட்ட இடமாகவும் ஆகி விடும். அளவே இல்லாத இறைவனுக்கு இதனால் அளவொன்று இருப்பதைக் கூறியதாகிவிடும். எனவே, இக்கதையை சிவபரத்துவத்தை உறுதியாக நம்புபவர்கள் ஏற்பதில்லை. பழம்புராணங்களிலும் இக்கதைகள் இல்லை. எனவே, இது இடைச்செருகல் என்று கூறுகின்றனர். என்றாலும், அன்பர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அந்தக் கதையின் பகுதியும் கீழே தரப்படுகிறது.

முன்பு சொல்லப்பட்ட பிரம்மனும், திருமாலும் ஒளிப்பிழம்பாக நின்ற சிவபெருமானின் அடியையும் முடியையும் தேடிச்சென்றபோது திருமால் நெருப்பின் அடியைக் காணமுடியாது திரும்பிவிட்டார். ஆனால், பிரம்மனுக்கோ தன் தோல்வியை ஒப்புக் கொள்ள மனம் இடம் தரவில்லை. அவன் அவ்வாறு கலங்கி நின்றபோது, ஒரு தாழம்பூ வேகமாக விழுவதைக் கண்டான். அத்தாழம்பூவை நோக்கி, ‘‘நீ எங்கிருந்து வருகிறாய்’’ என்று கேட்டான். அதற்கு அம்மலர் “பிரம்மனே நான் சிவபெருமானின் முடியில் இருந்து விழுந்துகொண்டிருக்கிறேன். நான் விழத் தொடங்கிய காலத்தில் இருந்து இதுவரை உன்னுடன் 14 பிரம்மதேவர்கள் தோன்றி மறைந்துவிட்டனர். உன்னால் அந்த இடத்தை அடைய முடியாது.

ஆதலால், உன் முயற்சியை விடுக’’ என்றது. அதனால் மனம் கலங்கிய பிரம்மன், அத்தாழம்பூவை நோக்கி, “மலரே.. எனக்காக ஒரு உதவிசெய். நான்தான் உன்னை இந்த ஒளிப்பிழம்பின் முடியைக் கண்டு அங்கிருந்து உன்னை அழைத்து வந்தேன் என்று பொய் சாட்சி சொல்லுவாயா?’’ என்று வேண்டினான். அதுவும் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டது.பின்னர், இருவரும் பூமியை அடைந்தனர். சிவபெருமான் அந்த நெருப்பு லிங்கத்திடையே தோன்றினார். பிரம்மன், சிவபெருமானிடம் உச்சியைக் கண்டதாகவும் அதற்குச் சாட்சியாக அங்கிருந்து தாழம்பூவை அழைத்து வந்ததாகவும் கூறினான். திருமால் மட்டும், தாம் தோற்றுவிட்டதாக ஒப்புக் கொண்டார். சிவபெருமான், பிரம்மனை நோக்கி, “நீ பொய் சொன்னதால் பூமியில் உனக்கு கோயிலும் பூஜையும் இல்லாது போகட்டும்’’ என்று கூறினார். தாழம்பூவை நோக்கி, “இனி நீ எந்த பூஜைக்கும் உதவாது போவாய்’’ என்றும், மொழிந்தார். பிரம்மனும் தாழம்பூவும் தம் பிழையைப் பொறுக்க வேண்டும் என்று பல காலும் அழுது தொழுதனர்.

அவர் பிரம்மனை நோக்கி அன்புடன், `நான் சொன்ன எதுவும் மாறாது. எனவே, பிராமணர்களை நோக்கி செய்யும் பூஜைகள் யாவும் உனக்கே ஆகட்டும் என்றும், தாழம்பூவை நோக்கி சிவபூஜைக்கு தவிர மற்ற தேவர் யாவர் பூஜைக்கும் உரியவனாவாய் என்றும் அருள்பாலித்தார். மீண்டும் அழுது தொழுதது. பின்னர், அதற்கு இரங்கி, லிங்கோத்பவ காலத்தில் மட்டும் அதனைச் சூடுவதாக அதற்கு அருள் புரிந்தார். பின்னர், திருமாலுக்கும் எல்லோருக்கும் பலவகையான அருளைப் புரிந்து தேவர்கள் யாவரும் சூழ, கயிலை மலையை அடைந்தார்.அவ்வாறு அவர்களால், துதிக்கப்பட்ட சமயமே சிவராத்திரி என்பர். பின்னாளில் இந்தக் கதையை ஒட்டி லிங்கோத்பவ மூர்த்தியை அமைத்தவர்கள், லிங்கம் வடிவில் திருமால் மேலே அன்னத்தின் வடிவில் பிரம்மன் ஆகியவற்றுடன் நீண்ட தாழம்பூவையும் அமைக்கத் தொடங்கினர். இச்சிற்பங்களை பின்நாளில் பரவலாகக் காணமுடிகிறது.

 

The post சிவராத்திரியும் தாழம்பூவின் கதையும்! appeared first on Dinakaran.

Tags : Shivaratri ,Thalambhu ,Shivratri ,
× RELATED சிவராத்திரிக்கே உரிய சிறப்புமிக்க திருத்தலங்கள்