×

ராசிபுரம் நகராட்சி 6வது இடம் பிடித்தது

ராசிபுரம், மார்ச் 8: ராசிபுரம் நகராட்சிக்கு, தூய்மை இந்தியா திட்டத்தில் ஒன்றிய அரசு எடுத்த கணக்கு அறிக்கையில் 6வது இடத்தை பிடித்துள்ளது. ஒன்றிய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், தூய்மை இந்தியா திட்டத்தை எவ்வாறு செயல்படுத்தி வருகிறது என்பதை கண்காணிக்க, கடந்த ஆண்டு 2023ல் ஆய்வு குழு ஒன்றை அனுப்பியது. இக்குழுவினர் 120க்கும் மேற்பட்ட நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

இதில், திருச்சி மறைமலை நகர் முதலிடத்தை பிடித்துள்ளது. தூத்துக்குடி 2வது இடத்தையும், கோவை, சாத்தூர் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. நாகப்பட்டினம், சங்கரன் கோவில் 4வது இடத்தையும், சென்னை, வாணியம்பாடி 5வது இடத்தையும், ராசிபுரம், புதுக்கோட்டை 6வது இடத்தையும் பிடித்துள்ளன. இதற்கான தரவரிசையை ஒன்றிய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்திற்கும் சான்றிதழ் அனுப்பி வைத்துள்ளது.

இது குறித்து நகராட்சி தலைவர் கவிதா கூறுகையில், ‘தூய்மை இந்தியா திட்ட ஆய்வு குழுவினர், ராசிபுரம் நகராட்சியில் 15 நாட்கள் தங்கியிருந்து ஆய்வு செய்துள்ளனர். ஒவ்வொரு துறைக்கும் தனியாக ஸ்டார் ரேட் வழங்கியுள்ளனர். இதன் அடிப்படையில் ஒட்டுமொத்த கணக்கீடும் முடிந்து, தற்போது தரவரிசையை வெளியிட்டுள்ளனர். இதில், ராசிபுரம் நகராட்சி 6வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு காரணமான தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நன்றி,’ என்றார்.

The post ராசிபுரம் நகராட்சி 6வது இடம் பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Rasipuram Municipality ,Rasipuram ,Union Government ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து