×

தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசு அமைய தேர்தலில் நல்ல முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியதாவது:
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியின் சார்பில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்தால் எனக்குத் தனி மகிழ்ச்சி வந்துவிடும். ஏனென்றால், எல்லோருக்கும் தெரியும். என் மனதுக்கு நெருக்கமாக விளங்கும் ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு அடித்தளமாக அமைந்ததே இந்த அனிதா அச்சீவர்ஸ் அகாடமிதான்.

கொளத்தூர் தொகுதியை மற்ற தொகுதிகளுக்கெல்லாம் எடுத்துக்காட்டாக, இதை ஒரு மாடல் தொகுதியாக நினைத்து அமைச்சர்கள் செய்து காட்டவேண்டும் என்பதற்காக தான் அவர்களை எல்லாம் அழைத்து வந்திருக்கிறேன். மார்ச் 8 மகளிர் நாள். நம்முடைய திராவிட மாடல் அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி, பல சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டிருக்கிறது. இப்படி தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய பல திட்டங்களை நாம் எவ்வளவோ செய்து கொண்டிருந்தாலும், அதே நேரத்தில் ஒன்றிய அரசின் ஒத்துழைப்போ, நிதி உதவியோ இல்லாமல்தான் நாம் செய்து கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கின்ற ஒன்றிய அரசு அமைந்தால் இன்னும் நிறைய செய்ய முடியும். அதற்கான காலம் கனிந்து கொண்டு இருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருடைய ஆதரவும் தேவை; தயாராகிவிட்டீர்களா. நம்முடைய திராவிட மாடல் அரசின் திட்டங்களை உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற விடியலின் ஒளியை இந்தியா முழுவதும் பரவிட வேண்டும் என்றால், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் நல்ல முடிவெடுக்க வேண்டும். அதுவும் கொளத்தூர் தொகுதியில் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இது என்னுடைய சட்டமன்ற தொகுதி, மன்னிக்க வேண்டும் நம்முடைய சட்டமன்ற தொகுதி. இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மேயர் பிரியா, எம்பிக்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்எல்ஏக்கள் தாயகம் கவி, வெற்றியழகன், ஜோசப் சாமுவேல், துணை மேயர் மகேஷ்குமார், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி தலைமை நிர்வாக அதிகாரிகள் நரேந்திரன், ஹெலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post தமிழ்நாட்டை வஞ்சிக்காத மாநிலங்களை மதிக்கும் ஒன்றிய அரசு அமைய தேர்தலில் நல்ல முடிவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : EU ,Tamil Nadu ,PM ,MLA K. Stalin ,Chennai ,Mu. K. Stalin ,Anita Acheevers Academy ,Chennai, Kolathur ,Anita ,Achileavers Academy ,Dinakaran ,
× RELATED அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல்...