×

பதவி உயர்வு அளிப்பதில் தாமதம் ஒன்றிய அரசை கண்டித்து 2500 அதிகாரிகள் பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு

புதுடெல்லி: பதவி உயர்வை ஒன்றிய அரசு தாமதப்படுத்துவதை கண்டித்து டெல்லியில் ஒன்றிய செயலக அதிகாரிகள் நேற்று அமைதி பேரணி நடத்தினர். தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள ஒன்றிய அரசு செயலகத்தில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பல ஒன்றிய அரசு ஊழியர்கள் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெறுவதால் ஓய்வூதிய பலன்களில் இழப்பு ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை கண்டறிய கடந்த 2022ல் ஒன்றிய அரசு உயர் மட்ட குழுவை அமைத்தது. அந்த குழு தனது பரிந்துரைகளை அரசிடம் அளிக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை, பாதுகாப்புத்துறை அமைச்சகங்கள் அமைந்துள்ள ரெய்சினாஹில்சில் ஊழியர்கள் சிலர் சமீபத்தில் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,ஒன்றிய செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி சாஸ்திரி பவனில் இருந்து நேற்று அமைதி பேரணி மேற்கொண்டனர். இதில் 2,500 பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்து ஒன்றிய செயலக ஊழியர்கள் சங்க தலைவர் உதித் ஆர்யா கூறுகையில்,‘‘ உயர்மட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தால் மட்டும் போதாது. உயர்மட்ட குழுவின் பரிந்துரைகள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும். ஒன்றிய செயலகத்தில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 13,016 ஆகும்.

சமீபத்திய புள்ளி விவரங்களின்படி 20 துறைகள் தங்களுக்கு கூடுதலாக 2,500 பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளன. அனைத்து துறைகளையும் சேர்த்து கணக்கில் எடுத்தால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகமாகும்.பணியாளர்கள் பற்றாக்குறையால் அலுவலக பணிகளில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு உயர்மட்ட குழு அறிக்கையை சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவதற்கு உத்தரவிட வேண்டும். பதவி உயர்வுகளை மேலும் தாமதப்படுத்தினால் அரசுக்கு எதிராக ஒத்துழையாமை போராட்டத்தினை முன்னெடுக்க நேரிடும். அடுத்த போராட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும்’’ என்றார்.

The post பதவி உயர்வு அளிப்பதில் தாமதம் ஒன்றிய அரசை கண்டித்து 2500 அதிகாரிகள் பேரணி: ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,New Delhi ,Union Secretariat ,Delhi ,Union government ,Union Government Secretariat ,Dinakaran ,
× RELATED ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று டிஜிட்டல் கேஒய்சி