×

சர்வதேச சுற்றுலா சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை திறந்து வைத்தார் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ்

பெர்லின்: ஒரு நாட்டின் அந்நிய செலவாணி உயர்வில் ஏற்றுமதி துறைக்கு அடுத்து சுற்றுலாத்துறை முக்கிய பங்காற்றுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால் சுற்றுலாத்துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகின்றது. சுற்றுலாவை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகமே வியக்கும் வகையில் சென்ற 2022 ஆம் ஆண்டில் மாமல்லபுரத்தில் நடத்தினார்கள். இதன் காரணமாக மாமல்லபுரம் சுற்றுலாத்தலம் உலகளவில் அதிக முக்கியத்துவம் பெற்று வெளிநாட்டவர்களால் அதிக அளவில் பார்வையிடப்படும் இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலமாக தற்போது விளங்கி வருகின்றது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சுற்றுலாத்துறையின் பல்வேறு காரணிகளான விருந்தோம்பல் (அமுதகம் உணவகங்கள், குயிக் பைட்ஸ் சிற்றுண்டியகங்கள்), ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், சுற்றுலா பயண ஏற்பாடு மேற்கொள்ளுதல், சுற்றுலா பயண திட்டங்கள், சுற்றுலா பேருந்துகள் என அனைத்து தளங்களிலும் பங்காற்றி வருகின்றது. மேலும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் 9 படகு குழாம்களையும் நடத்தி சுற்றுலா பயணிகளுக்கு சாகச உணர்வையும் வழங்கி வருகின்றது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சர்வதேச பலூன் திருவிழா, சர்வதேச பட்டம் விடும் திருவிழாவினையும் நடத்தி வருகின்றது.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை அதிக நாட்கள் தங்கி சுற்றுலாத் தலங்களுக்கு செல்லத்தூண்டும் வகையில் நீலகிரி, ஏலகிரி, கொல்லிமலை, ஜவ்வாது உள்ளிட்ட மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் சாகச விளையாட்டு மையங்கள் ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பழமையான சுற்றுலாத்தலங்கள், கோவில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், நீர்வீழ்ச்சிகள், கடற்கரைகள் குறித்த கழுகுக்கண் பார்வை அனுபவத்தையும், சுற்றுலா பயணிகள் நேரில் சென்று பார்வையிட்டதைப் போன்ற அனுபவங்களையும் தரும் வகையிலான குறும்படங்கள் உலகமெங்கும் உள்ள சுற்றுலா பயணிகளை எளிதில் சென்றடையும் வகையில் யூடியூப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.

அதிக அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அதிக அளவில் பங்கு பெறும் இந்திய அளவிலான பயண சுற்றுலா சந்தைகள், வெளிநாடுகளில் நடைபெறும் பயண சுற்றுலா சந்தைகள் மற்றும் கண்காட்சிகளில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கம் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் சுற்றுலா சிறப்புகளை தெரிவிக்கும் குறும்படங்கள் திரையிடப்பட்டும், புத்தகங்கள், சிறு கையேடுகள் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாத்துறையினர், பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டும் கவன ஈர்ப்பு செய்யப்படுகின்றது.

ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 5.3.2024 முதல் தொடங்கி 7.3.2024 வரை நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா சந்தையில் (INTERNATIONAL TOURISM BOURSE-2024) அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை ஜெர்மனிக்கான இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் (05.03.2024) அன்று தமிழ்நாடு அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் இ.ஆ.ப., முன்னிலையில் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில் தமிழகத்தின் சுற்றுலா தொழில் முனைவோர்களான விடுதி மற்றும் உணவகம் நடத்துபவர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு சுற்றுலாத்துறை அரங்கில் தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகங்கள் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கி தமிழ்நாட்டில் சுற்றுலா பயணம் மேற்கொள்ளவும், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் ஜெர்மனி நாட்டின் சுற்றுலா பயணிகள் தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள பயண தொகுப்புகளை தயார் செய்யவும் தேவையான பணிகளை மேற்கொண்டார்கள்.

The post சர்வதேச சுற்றுலா சந்தையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை திறந்து வைத்தார் இந்திய தூதர் பர்வதனேனி ஹரிஷ் appeared first on Dinakaran.

Tags : AMBASSADOR ,PARVADHANENI HARISH ,TAMIL NADU ,Berlin ,Prime Minister of Tamil Nadu ,India ,Parvadaneni Harish ,
× RELATED போட்டோ எடுக்கக்கூடாதா? நான் ஓட்டே போட...