×

வேப்பூர் அருகே நள்ளிரவில் துணிகரம்: 2 கோயில்களை உடைத்து 3 பவுன் செயின், 3 ஆயிரம் பணம் கொள்ளை

வேப்பூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் மாரியம்மன்‌கோயில் மற்றும் ஓம் சக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கடப்பாரை கொண்டு முத்துமாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து உள்ளே சென்று சாமியின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை திருடியுள்ளனர். சத்தம் கேட்டதும் அருகிலிருந்து விட்டில் தூங்கிக்கொண்டிருந்த கூலி தொழிலாளி ராமச்சந்திரன் (35) என்பவர் ஓடிவந்தார். அப்போது கோயிலில் மர்ம நபர்கள் திருடிக்கொண்டிருப்பதை பார்த்ததும் சத்தம் போட்டார். மேலும் அதே கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (31) என்பவரின் துணையுடன் கொள்ளையர்களை பிடிக்க துரத்தியுள்ளனர்.

அப்போது கொள்ளையர்கள் ராமச்சந்திரன் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பிஓடி விட்டனர். இதில் மாதேஷுக்கு மூக்கு, கை, கால்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ராமச்சந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இதனிடையே அருகில் உள்ள ஓம்சக்தி கோயிலில் வைத்திருந்த சில்வர் உண்டியலையும் உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார். அதில் அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் தாலி செயின் மற்றும் சில்வர் உண்டியலில் இருந்த 3000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடிச்சென்றிருக்கலாம் என தெரியவந்தது. மாரியம்மன் கோயில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் கிடந்த செயின் மற்றும் ஓம்சக்தி கோயில் சில்வர் குட உண்டியலை திருடிய சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இரண்டு கோயில்களை உடைத்து தங்க செயின் மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வேப்பூர் அருகே நள்ளிரவில் துணிகரம்: 2 கோயில்களை உடைத்து 3 பவுன் செயின், 3 ஆயிரம் பணம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Veypur ,Mariamman temple ,Om Shakti temple ,Kandapangurichi village ,Cuddalore district ,Muthumariamman temple ,
× RELATED தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்