×

தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இது பெண்கள் தங்கள் மாங்கல்யம் காக்க செய்யும் மிக முக்கியமான நோன்பு. நளாயினி தன் கற்பின் வலிமையால் ‘சூரியனே உதிக்கக்கூடாது’ என்று ஆணையிட்டாள். சாவித்திரி காலனே ‘தீர்க்க சுமங்கலிபவ’ என ஆசி பெற்று தன் கணவன் சத்தியவானின் உயிரை மீட்டாள் என வரலாறு கூறுகின்றது. அத்துணை சிறப்பு வாய்ந்தது காரடையான் நோன்பு.

காரடையான் நோன்பின் போது பெண்கள் ‘காரடை’ என்னும் பணியாரம் செய்து படைப்பர். இது மாசி மாதம் கடைசி நாளன்று பங்குனி முதல் நாளில் நடைபெறும். அன்றைய தினம் சுத்தமாக குளித்து விளக்கேற்றி கோலமிட்டு எதுவும் சாப்பிடாமல் இறைவனை வேண்டி பக்தியுடன் செய்யும் நோன்பு. தரையில் கோலமிட்டு, நுனி வாழை இலை போட்டு, மேல் பக்கம் வெண்ணெய் உருட்டி வைத்து, உடன் வெல்லம் மற்றும் உப்பில் செய்த இரண்டு அடைகள் வைக்க வேண்டும்.

தேங்காய், வெற்றிலை பாக்கு, பழத்துடன் நோன்பு கயிற்றில் பூ கட்டி வீட்டிலுள்ள பெண்கள் எத்தனை பேர் உள்ளனரோ அந்தளவு இலை போட்டு படைக்க வேண்டும். பிறகு கற்பூரம் ஏற்றி நோன்பு கயிற்றை எடுத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். அப்பொழுது “உருக்காத வெண்ணெயும் ஓர் அடையும் வைத்தேன். ஒருக்காலும் என் கணவன் என்னை விட்டுப்பிரியாமல் இருக்க வேண்டும்” என்று வேண்டி நோன்பு கயிற்றை கட்டிக் கொண்ட பின் வீட்டிலுள்ள மற்ற பெண்கள், சிறுமியர் ஆகியோருக்கு கட்டிவிட வேண்டும்.

சிறு வயதினர் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும். மனைவி தன் கணவனை வணங்க வேண்டும். பிறகு அந்த நோன்பு பிரசாதத்தை உண்ண வேண்டும். வீட்டில் எல்லோரும் உண்டபின் மீதமுள்ள அடையை எடுத்து வைத்து மறுநாள் காலையில் தவறாமல் பசுமாட்டிற்குக் கொடுக்க வேண்டும். தாலிச்சரடினை மாற்றிக்கொண்டு புதுச்சரடு கட்டிக் கொள்ள இது சிறந்த நாளாகும்.

காரடை செய்முறை

பச்சரிசியை கழுவி, துணியில் நிழலில் உலர்த்தி, பின் அதனை மிக்சியில் மாவாக்கி அல்லது மிஷினில் அரைத்து உபயோகிக்கலாம். ஒரு கடாயை சூடுபடுத்தி அதில் இந்த அரிசி மாவை வறுத்து சலிக்கவும். உப்பு அடை, வெல்ல அடை இரண்டிற்கும் ஒரே மாவுதான்.

உப்பு அடை செய்ய தேவையானவை

அரிசி மாவு-2 கப்,
ஊறவைத்து வேகவைத்த சிவப்பு காராமணி-ஒரு கைப்பிடி,
தேங்காய் பல்லு பல்லாய் நறுக்கியது- 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய்-1 பொடியாக நறுக்கியது,
கறிவேப்பிலை – 1 கொத்து நறுக்கியது.

தாளிப்பதற்கு
கடுகு-1 டீஸ்பூன்,
கட்டிப் பெருங்காயம் – சுண்டைக்காய் அளவு,
சமையல் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் முதலியவற்றை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கி 3 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு ேசர்த்து வேகவைத்த காராமணி, தேங்காய் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் சிறிது சிறிதாக அரிசிமாவை சேர்த்து கட்டி சேராமல் கிளற வேண்டும். வெந்த மாவை ஒரு தட்டில் மாற்றவும். மாவு நன்கு ஆறியதும் பெரிய எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து கனமாக வடை போல் தட்டி, இட்லி அவிப்பது போல் அவித்து வைக்கவும்.

வெல்ல அடைக்கு தேவையானவை

அரிசி மாவு – 2 கப்,
வெல்லம் உடைத்தது – 1 கப்,
வேகவைத்த காராமணி – 1 கைப்பிடி,
நறுக்கிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்,
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை

வெல்லத்தை உடைத்து, 3½ கப் நீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரைய விடவேண்டும். பின் வடிகட்டி மண் நீக்கி மறுபடியும் அதை கொதிக்க விட வேண்டும். இந்த வெல்லக்கரைசல் லேசாக கொதி வரும் பொழுது காராமணி, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றை ேசர்த்து, அரிசி மாவையும் சேர்த்து, நன்கு கிளறி ஆறவைத்து, உப்பு அடை தட்டியது போல் தட்டி, ஆவியில் வைத்து எடுக்க வேண்டும். இது மிகவும் சுவையான பலகாரம். எளிமையாக சுலபமாக செய்யக்கூடியது. பாரம்பரியமானது.

தொகுப்பு: சுதா

The post தீர்க்க சுமங்கலி வரம் தரும் காரடையான் நோன்பு appeared first on Dinakaran.

Tags : Nalayini ,Savitri Kalane ,Thirkka Sumangaliphava ,Sathyavan ,
× RELATED செயல்கள் தடுமாறுவதற்கு காரணங்கள் இதுதான்