×

கொளப்பலூர் பேரூராட்சி பகுதியில் 105 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா

கோபி,மார்ச் 7: கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சி பகுதியில் 40 ஆண்டுகளாக வீட்டு மனை பட்டா கிடைக்காமல் போராடிய கிராம மக்களுக்கு கொளப்பலூர் பேரூராட்சி தலைவரின் முயற்சியால் 105 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. கோபி அருகே உள்ள கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டுவலுவு அரிசன காலனி, சாணார்பாளையம் அரிசன காலனியில் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 105 குடும்பங்களுக்கு 40 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை.

இது குறித்து இரு கிராம மக்களும் கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகத்திடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் பேரூராட்சி தலைவர் நடத்திய விசாரணையில், 105 குடும்பத்தினரும் வசித்து வந்த பகுதி வருவாய்த்துறை பதிவேடுகளில் கிராம நத்தம் என பெயர் மாற்றம் செய்யப்படாத நிலையில் வீட்டு மனை பட்டா வழங்க முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், விசாரணை நடத்திய கலெக்டர் ராஜகோபால் சுன்காரா, உடனடியாக இணையதளம் மூலமாக நத்தம் என கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மேட்டுவலுவு அரிசன காலனி மற்றும் சாணார்பாளையம் அரிசான காலனியை சேர்ந்த 105 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்காரா தலைமையில் அமைச்சர் முத்துசாமி 105 குடும்பங்களுக்கும் நேற்று ஈரோட்டில் வீட்டுமனை பட்டா வழங்கினார்.

நிகழ்ச்சியில் கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி அருள்மணி, நிர்வாகிகள் கண்ணன், முருகேசன்,மணிமேகலை, கோவிந்தன், தர்மன், சாமிநாதன், சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 40 ஆண்டுகால கோரிக்கை நிறைவேறியதால் கிராம மக்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

The post கொளப்பலூர் பேரூராட்சி பகுதியில் 105 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Tags : Kolappalur ,Gobi ,Kollapalur Municipality ,Kolapalur Municipality ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது