×

தஞ்சாவூர் காந்திஜி சாலை ராணி வாய்க்காலில் ரெடிமேட் கான்கிரீட் பாலம்

தஞ்சாவூர், மார்ச் 7: தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராணிவாய்க்கால் குறுக்கே கான்கிரீட்டால் ஆன ரெடிமேடு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலம் 2 நாளில் பயன்பாட்டுக்கு வருகிறது. தஞ்சை மாநகரில் உள்ள முக்கியமான சாலைகளுள் ஒன்று காந்திஜி சாலையாகும். இந்த சாலை தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் வரை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே கல்லணைக்கால்வாய் ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் இருந்த இர்வீன்பாலம் பழையதாக இருந்ததாலும், போக்குவரத்துக்கு போதுமான வசதி இல்லாததாலும் அகற்றி விட்டு இரட்டைபாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த ஆண்டு இரட்டைபாலம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த சாலையில் கல்லணைக்கால்வாய் அருகே மழைநீர் வடிகால் பாலமும் உள்ளது. தஞ்சை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் ஆற்றுப்பாலம் அருகே சாலையின் குறுக்கே சாலைக்கு அடியில் குழாய் பதிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டு பின்னர் கல்லணைக்கால்வாய்க்கு அடியில் ராணி வாய்க்கால் வழியாக சென்றது.

இந்த மழைநீர் வடிகால் பாலம் குறுகியதாக இருந்தாலும், அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலையின் குறுக்கே தரைமட்ட புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்த சாலை முக்கிய சாலை என்பதாலும், போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலை என்பதாலும் பணிகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி ஒன்றரை மீட்டர் அகலமும், 21 மீட்டர் நீளமும் கொண்ட வகையில் இந்த தரைமட்ட பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்காக ரெடிமேடு கான்கிரீட்டால் ஆன பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரெடிமேட் கான்கிரீட் பாலம் 14 எண்ணிக்கையில் தயார் செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 2 பிரிவாக பிரித்து பணிகள் நடைபெற்றது. அதன்படி சாலை தோண்டப்பட்டு, முதல் கட்டமாக 6 கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டு 2 நாளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மற்றொரு பகுதியில் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பகுதியில் 8 எண்ணிக்கையிலான கான்கிரீட் பாலம் அமைக்கப்படுகிறது.

குழி தோண்டப்பட்டு பணிகள் முடிவடைந்ததும் ராட்சத இயந்திரங்கள் மூலம் கான்கிரீட் பாலம் எடுத்துவரப்பட்டு பொருத்தப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பணிகள் முடிவடைந்தவுடன், பின்னர் தார்ச்சாலை அமைக்கப்படும். வழக்கமாக பாலம் கட்டுவதாக இருந்தால் கம்பி கட்டி தடுப்புகள் ஏற்படுத்தி கான்கிரீட் போடப்பட்டு 21 நாட்கள் வரை தண்ணீர் ஊற்றி நல்ல முறையில் பராமரித்தால் தான் வலுவானதாக இருக்கும்.

ஆனால் தற்போது உள்ள ரெடிமேடு கான்கிரீட்டால் போடப்படும் பாலம் பொருத்தப்பட்ட 2 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும். இந்த ரெடிமேடு கான்கிரீட் தயார் செய்யப்படும் இடங்களிலேயே 21 நாட்கள் வரை தண்ணீர் ஊற்றி உரிய முறையில் தயார் செய்த பின்னர் எடுத்துவரப்படுகிறது. ரயில்வே தண்டவாளம் பகுதியில் கீழ்பாலம் அமைப்பதற்காகவும் இது போன்ற கான்கிரீட் பாலம்தான் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

The post தஞ்சாவூர் காந்திஜி சாலை ராணி வாய்க்காலில் ரெடிமேட் கான்கிரீட் பாலம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur Gandhiji Road ,Rani ,Thanjavur ,Ranivaikal ,Gandhiji Road ,Tanjore ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...