×

பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் வரி செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை: ஆணையர் லதா எச்சரிக்கை

பூந்தமல்லி, மார்ச் 7: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்கள், வரி செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளை சேர்ந்தவர்கள் தொழில் வரி, சொத்து வரி, காலி நிலமனை வரி, குடிநீர் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டாமல் நிலுவையில் உள்ளவர்கள் வரியை விரைந்து செலுத்த வேண்டும் என பூந்தமல்லி நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

ஆனால், இன்னும் பலர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாமல் உள்ளனர். இதுவரை 70 சதவீதம் வரிப்பணம் மட்டுமே வசூலாகியுள்ளது. நகராட்சிக்கு வரவேண்டிய வருவாய் நிலுவையில் உள்ளதால், நகரில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், முறையான குடிநீர் விநியோகம், குடிநீர் விநியோகத்துக்கான மின் கட்டணம், நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கான மாத ஊதியம் ஆகியவற்றை உரிய காலத்தில் வழங்க இயலாத சூழ்நிலை உருவாகிவிடும். இதையடுத்து நகராட்சி ஆணையர் லதா தலைமையில், அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் லதா நிருபர்களிடம் கூறியதாவது: பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டு வரி, தொழில் வரி, காலிமனை வரி, தண்ணீர் வரி, கடை வாடகை, குத்தகை உள்ளிட்ட வரிகளை வசூல் செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வரி செலுத்தாதவர்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உரிய காலத்தில் வரி, கட்டணங்களை செலுத்த தவறியவர்களின் குடிநீர் இணைப்பு நகராட்சி பணியாளர்கள் மூலம் துண்டிக்கப்படும். மேலும், அதிகளவு வரி நிலுவை வைத்துள்ளவர்கள் விவரம் மின்சாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மின் துண்டிப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று, காலிமனை வரி செலுத்தாதவர்களின் பெயர் பட்டியல் சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, சொத்து பரிமாற்ற பதிவு நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் ஜப்தி நடவடிக்கையுடன் சட்ட ரீதியாக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக வரிகளை செலுத்தி நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் வசதிக்காக தினசரி காலை 8.30 முதல் மாலை 7 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் பணி நடைபெறும் என்றார். உரிய காலத்தில் வரி, கட்டணங்களை செலுத்த தவறியவர்களின் குடிநீர் இணைப்பு நகராட்சி பணியாளர்கள் மூலம் துண்டிக்கப்படும்.

The post பூந்தமல்லி நகராட்சி பகுதிகளில் வரி செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை: ஆணையர் லதா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Commissioner ,Latha ,Dinakaran ,
× RELATED திருவேற்காடு நகராட்சியில் தூய்மை...