×

கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, மார்ச் 7: செங்கல்பட்டு மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில், இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்த 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை கருப்பொருளாகக்கொண்டு, மாவட்ட, மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. இதில், குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய ஐந்து பிரிவுகளில் செங்கல்பட்டு மாவட்ட அளவிலான போட்டிகள் வரும் 10.3.2024ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று காலை 10 மணியளவில் செங்கல்பட்டில் உள்ள தூய கொலம்பா மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. மேலும், விவரங்களுக்கு கலை பண்பாட்டு துறையின் காஞ்சிபுரம் மண்டல அலுவலகத்தை தொலைபேசி 044-2726 9148 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை கலைத்திறன் மிக்க செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஓவியம் வரைதல்
இளைஞர் கலை போட்டியில், நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

என்னென்ன நிகழ்ச்சிகள்
இளைஞர் கலை போட்டியில் தனிநபராக பங்கேற்க வேண்டும். குழுவாக பங்கு பெற அனுமதி இல்லை. குரலிசை போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், தவில், மிருதங்கம், போன்ற கருவி இசைப்போட்டியிலும், பரதநாட்டிய போட்டியிலும் அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், கைச்சிலம்பாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும். ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டு வரவேண்டும்.

The post கலை பண்பாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,District Collector ,Arunraj ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் அஞ்சல்துறை...