×

வெளியேறு, வெளியேறு என முழக்கம் தமிழிசையை சிறைப்பிடித்து போராட்டம்

புதுச்சேரி, மார்ச் 7: தெலங்கானாவில் இருந்த கவர்னர் தமிழிசை நேற்று முன்தினம் மாலை சிறுமியின் வீட்டுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றார். அப்போது அவரை வழி மறித்து வெளியேறு, வெளியேறு என கோஷமிட்டனர். சம்பவம் நடந்து பல நாட்களாகிவிட்டது. இப்போது ஏன் வந்தீர்கள், வெளியே போ.. வெளியே போ.. என தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். தமிழிசை மேற்கொண்டு சிறுமியின் சடலம் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு, செல்ல முடியாமல் தவித்தார். உடனே அங்கு போராட்டம் நடத்தியவர்களை போலீசார் அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

தொடர்ந்து சிறுமியின் சடலத்துக்கு மாலை அணிவித்து தமிழிசை அஞ்சலி செலுத்தினார். அப்போது சிறுமியின் தாயாரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். சிறுமியை பார்த்து அஞ்சலி செலுத்த பல அலுவல் பணிகளை தவிர்த்து விட்டு வந்ததாக கூறினார். அப்போது சுற்றியிருந்தவர்கள், சிறுமி இறந்து 4 நாட்களுக்கு பிறகு வந்துவிட்டு, இப்போது போட்டோவுக்கு போஸ் கொடுப்பதா? எனவும் கூறினர். மற்றொரு பக்கம் சுட்டுப்பிடி, சுட்டுப்பிடி கொலையாளிகளை சுட்டுப்பிடி என முழக்கமிட்டனர். அஞ்சலி செலுத்துவிட்டு காரில் ஏறுவதற்காக வந்தார்.

அவர் வெளியேற முடியாதபடி சிறைப்பிடித்து, தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனால் எதிர்திசையில் பயணித்து வேறு வழியாக சென்றபோது, அங்கும் செல்ல முடியாதபடி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி போலீசார், போராட்டக்காரர்களை, லேசான தடியடி நடத்தி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து பாதுகாப்பாக புறப்பட்டு சென்றார். இது குறித்து தமிழிசை கூறுகையில், ஒரு தாயாக நானும் குழந்தையின் தாயுடன் நிற்கிறேன்.

இதன் காரணமாகவே இங்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கிறது என தெரிந்தும் இங்கு வந்துள்ளேன். நான் இதனை அரசியலாக பார்க்கவில்லை, மக்களுடைய உணர்வாக பார்க்கிறேன். சிறுமியின் தாய் என்னைப் பார்த்தவுடன் மிகப்பெரிய ஆறுதலாக இருப்பதாக தெரிவித்தார். குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள் இதில் எந்தவித சலுகையும் கிடையாது, வேகமாக இந்த வழக்கை நடத்த சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து ஒரு வாரத்திற்குள்ளாகவே, இந்த விசாரணையை பெண் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட அரசுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.

சிலர் ஆக்ரோஷமாக சில தண்டனைகள் கொடுக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் சட்டத்தை நம் கையில் எடுக்க முடியாது. பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன், அதே நேரத்தில் இது போன்ற மற்றொரு சம்பவம் மீண்டும் நடைபெறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன், என்றார். இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

The post வெளியேறு, வெளியேறு என முழக்கம் தமிழிசையை சிறைப்பிடித்து போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Governor ,Tamilisai ,Telangana ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு