×

சிங்கப்பூர் கட்டிட தொழிலாளி வீட்டில் துணிகரம் 18 பவுன் நகை, ₹1.10 லட்சம் கொள்ளை

மங்கலம்பேட்டை, மார்ச் 7: கோவிலுக்கு சென்றபோது சிங்கப்பூர் கட்டிட தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன், ரூ. ஒரு லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அருகேயுள்ள ரூபநாராயணநல்லூரை சேர்ந்தவர் ஐயப்பன். இவரது மனைவி காயத்ரி(26). இவர்களுக்கு தட்சன்யா(6), தரனேஷ்(2) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ஐயப்பன் சிங்கப்பூரில் கட்டிட தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் பிள்ளைகளுடன் காயத்ரி மற்றும் காயத்ரியின் மாமனார் ராஜேந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர்.

காயத்ரி நேற்று முன்தினம் காலை சமயபுரம் கோயிலுக்கு சென்றுள்ளார். ராஜேந்திரன் அன்றிரவு வீட்டை பூட்டிவிட்டு, வயலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அங்கு வந்து, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் காயத்ரி மாமனார் ராஜேந்திரன் பீரோவில் இருந்த ரூ.50,000 பணம் மற்றும் 2 பவுன் நகை என மொத்தம் 18 பவுன் நகை, ரூ.ஒரு லட்சத்தி 10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதையடுத்து நேற்று காலை அவரது வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயத்ரி மற்றும் மங்கலம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடையங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி மங்கலம்பேட்டை சாலை, பள்ளிப்பட்டு சமத்துவபுரம் பகுதியில் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதைதொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post சிங்கப்பூர் கட்டிட தொழிலாளி வீட்டில் துணிகரம் 18 பவுன் நகை, ₹1.10 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Singapore ,Mangalampet ,Rupanarayanallur ,Mangalampet, Cuddalore district ,
× RELATED கள்ள ஓட்டு போடுவதை தடுத்ததால் வீடு புகுந்து தாக்குதல்