×

சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரம் அமைச்சர்களுக்கு எதிராக உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு

சென்னை: சென்னையில் கடந்த 2023 செப்டம்பர் 2ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருந்தார். இதில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுவும் பங்கேற்றார். இதேபோல், திமுக எம்.பி ஆ.ராசாவும் சானாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியுள்ளார். இதையடுத்து, எந்த தகுதியின் அடிப்படையில், இவர்கள் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கமளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்து கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று நீதிபதி அனிதா சுமந்த் தீர்ப்பளித்தார். தீர்ப்பில், இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை என்ற போதும் மனுதாரர் கோரிய எந்த நிவாரணமும் வழங்க முடியாது. எனவே, இந்த வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். அது முழுமையான புரிதலுடன் இருக்க வேண்டும். அந்த கருத்துகள் எந்த ஒரு நம்பிக்கைக்கும் அழிவை ஏற்படுத்துவதாக இருக்க கூடாது. ஆக்கப்பூர்வமான கருத்துக்களையே தெரிவிக்க வேண்டும். பொது இடங்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள் தெரிவிக்கும் கருத்துகள், உண்மை விவரங்களின் அடிப்படையில் துல்லியமாக இருக்க வேண்டும். எந்த கொள்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயே கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் மூலம் மட்டுமே அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத முடியாது. சனாதன தர்மத்தை எய்ட்ஸ், கொரோனா, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு பேசியது இந்துத்துவத்தை பற்றிய புரிதல் இல்லாததையே காட்டுகிறது. வழக்குகளில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே இந்திய அரசியல் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மூலம் தகுதியிழப்பு செய்ய முடியும். சனாதன பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அந்த வழக்குகளில் தண்டனை எதுவும் விதிக்கப்படாத நிலையில், இந்த வழக்குகளின் அடிப்படையில் எந்த தகுதியில் பதவியில் நீடிக்கிறார்கள் என்று விளக்கமளிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி முடித்து வைத்தார்.

The post சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரம் அமைச்சர்களுக்கு எதிராக உத்தரவிட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Sanadhan ,Chennai High Court ,Chennai ,Minister ,Udayanidhi ,Communist Party of India ,Department of Hindu Religious Institutions ,Shekhar Babu ,Dimuka ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...