×

ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்றதாக கூறி முதலீடு பெற்று தனியார் நிறுவனம் ₹50 கோடி மோசடி: எஸ்.பி.யிடம் இளைஞர்கள், இளம்பெண்கள் புகார்

நாகர்கோவில்: ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்றதாக கூறி முதலீடு பெற்ற தனியார் நிறுவனம் ₹50 கோடி வரை மோசடி செய்துள்ளதாக அதில் பணியாற்றிய இளைஞர்கள், இளம்பெண்கள் பரபரப்பு புகாரை கூறி உள்ளனர். குமரி மாவட்டம் நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனித்தனியாக மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது :
மதுரையை தலைமை இடமாக கொண்ட தனியார் கூட்டுறவு நிறுவனம் சார்பில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் உட்பட 12 இடங்களில் கிளை அலுவலகங்கள் தொடங்கப்பட்டன. இதில், பட்டதாரி இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் ஊழியர்களாக வேலையில் சேர்ந்தோம். பணியில் சேர்ந்ததும் இது ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்பதால் வைப்பு தொகையாக ₹1 லட்சம், இரண்டு லட்சம் கட்ட வேண்டும் என்று கூறினார்கள். இதனை நம்பிஅவர்கள் கேட்ட தொகையை நாங்களும் செலுத்தினோம். மேலும், வைப்புதொகைக்கு 11 சதவீத வட்டி வழங்கப்படும் என்று கூறி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று கூறினார்கள். இதனால் எங்களுக்கு தெரிந்தவர்களிடம் பேசி வைப்பு நிதி செலுத்த கூறினோம். இதை நம்பி வாடிக்கையாளர்கள் பலரும் மாதம் ₹50 ஆயிரம், ₹1 லட்சம் என லட்சக்கணக்கில் பணம் செலுத்தினார்கள். ஆனால் முதிர்வு காலம் முடிந்த பின்னரும் அந்தத் தொகையை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர்.

மேலும் ஊழியர்களான எங்களுக்கும் பல மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதன் மூலம் அவர்கள் ₹50 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பார்கள். தற்போது இந்த நிறுவனத்தை நடத்தியவர்கள் தலைமறைவாக உள்ளனர். திருச்சியை சேர்ந்த இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான கணவன், மனைவி மீது கடும் நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர். புகார் அளிக்க 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம் பெண்கள் வந்ததால் எஸ்.பி. அலுவலகம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஒன்றிய அரசு அங்கீகாரம் பெற்றதாக கூறி முதலீடு பெற்று தனியார் நிறுவனம் ₹50 கோடி மோசடி: எஸ்.பி.யிடம் இளைஞர்கள், இளம்பெண்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,SP ,Nagercoil ,Union Government ,Marthandam ,Kumari ,Dinakaran ,
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...