×

சூனியம் வைத்ததால் தந்தை இறந்ததாக சந்தேகம்: கூலிப்படை ஏவி மந்திரவாதி கொலை: தொழிலாளி உள்பட 5 பேர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் மலபாடு கிராமத்தில் வசிப்பவர் துளசிநாயக் (49), மந்திரவாதி. இவர் பூஜைகள் செய்வாராம். மேலும் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டு வந்தால் அவர்களுக்கு மந்திரம் போட்டு தாயத்து கட்டி விடுவாராம். இதனால் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், துளசிநாயக்கிடம் மந்திரம் போட்டு கொண்டு தாயத்து கட்டி செல்வது வழக்கமாம். நாளுக்கு நாள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து மந்திரவாதி துளசி நாயக்கிடம் வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதற்கிடையே துளசிநாயக் சூனியம் செய்வதாகவும் கிராம மக்களிடம் வதந்தி பரவியது. அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சிவநாயக்கின் தந்தை சீதாநாயக்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. துளசிநாயக்கிடம் அழைத்து சென்று மந்திரம் போட்டும் சரியாகவில்லை. இதனால் துளசிநாய்க்கிடம் சிவநாயக் தகராறு செய்துள்ளார். பின்னர், சிவநாயக் தனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சீதாநாயக் இறந்து விட்டார்.

துளசிநாயக் சூனியம் வைத்ததால்தான் சீதாநாயக் இறந்ததாக அந்த கிராமத்தில் வதந்தி பரவியது. இதனை சிவநாயக்கும் நம்பியுள்ளார். எனவே தனது தந்தையின் சாவுக்கு காரணமான துளசிநாயக்கை கொலை செய்ய முடிவு செய்தாராம். இதனை தனது நண்பரான நாகிரெட்டியிடம் கூறியுள்ளார். அவர் தனது வயலில் வேலை செய்யும் தொழிலாளி கங்குலப்பாலத்தை சேர்ந்த ராமஞ்சநேயலுவிடம் கூறினார். பின்னர், ராமஞ்சநேயலு காக்கிநாடாவில் உள்ள தனது உறவினரான கங்காவுக்கு தகவல் கொடுத்தார். அவரிடம் ரூ.3 லட்சம் பேரம் பேசி முதல் தவணையாக ரூ.30 ஆயிரத்தை சிவநாயக் கொடுத்தாராம்.

இதனையடுத்து நேற்று முன்தினம் அக்னிகுண்டலா கிராமத்தில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த துளசி நாயக்கை கங்கா கட்டையால் சரமாரி தாக்கி கொலை செய்தாராம். மேலும் துளசி நாயக்கின் பைக்கிற்கும் தீ வைத்து எரித்துள்ளார். இந்நிலையில் நேற்று அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதனையடுத்து போலீசார், சிவநாயக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து கங்கா, அவருக்கு உதவியாக செயல்பட்ட 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சூனியம் வைத்ததால் தந்தை இறந்ததாக சந்தேகம்: கூலிப்படை ஏவி மந்திரவாதி கொலை: தொழிலாளி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tulsinayak ,Malapadu ,Balnadu district ,Andhra Pradesh ,
× RELATED கண்ணமங்கலம் அருகே தம்டகோடி மலையில் தீ