×

“நீங்கள் நலமா” திட்டம்: பயனாளிகளைத் தொடர்புகொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் பெரியகருப்பன்..!!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ”நீங்கள் நலமா” சிறப்புத்திட்டத்தின் மூலம் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் வாயிலாக பயன்பெற்ற பயனாளிகளைத் தொடர்புகொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கேட்டறிந்தார். தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி திட்டப்பயன்கள் அனைத்தும் பொதுமக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் வகையில் இன்றைய தினம் (06.03.2024) “நீங்கள் நலமா” என்ற சிறப்புத்திட்டத்தினை துவக்கிவைத்து, பயனாளிகளைத் தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம், அமைச்சர் பெருமக்கள், தலைமைச் செயலாளர், அனைத்துத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சிதலைவர்கள் ஆகியோர் அரசுத்திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களைத் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டுகருத்துக்களைக் கேட்டறிய அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களால் பயன்பெற்ற தூத்துக்குடி, காஞ்சிபுரம், சேலம், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் தொலைபேசி வாயிலாக நேரடியாக தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்.

அதேபோன்று, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர்.கே.கோபால்.இ.ஆ.ப., மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் டாக்டர். ந.சுப்பையன்.இ.ஆப., ஆகியோரும் தொலைபேசி வாயிலாக பயனாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துகளைக் கேட்டறிந்தார்கள். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன், கேசிசி கால்நடை கடன், மத்திய கால வேளாண் கடன், மகளிர் சுய உதவி குழுக்கடன், TABCEDCO கடன், TAMCO கடன், NHFDC கடன், மாற்றுத்திறனாளி கடன், தாட்கோ கடன், சிறுவணிக கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் (MSME), பணிபுரியும் மகளிர் கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன் போன்ற கடனுதவிகளும், “மிக்ஜாம்” புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட சிறு வணிகர்களுக்காக “முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்படும் சிறப்பு திட்டங்களான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம், நிவாரணத் தொகை வழங்கும் திட்டம் போன்ற சிறப்பு திட்டங்களும் கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களின் “நீங்கள் நலமா” என்ற சிறப்புத்திட்டத்தின் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களிடம் சென்றடைவது உறுதிபடுத்தப்படுகிறது. மேலும், திட்டத்தின் செயல்பாடுகள் பொதுமக்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கவும் இது பேருதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. ”சொன்னதைச் செய்யும் நம் முதல்வர், சொல்லாததையும் செய்து காட்டியுள்ளார்” என்பது இத்திட்டத்தின் வாயிலாக தெளிவாக தெரிகின்றது என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே ஆர்.பெரியகருப்பன் அவர்கள் திட்டம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்கள்.

The post “நீங்கள் நலமா” திட்டம்: பயனாளிகளைத் தொடர்புகொண்டு நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தார் அமைச்சர் பெரியகருப்பன்..!! appeared first on Dinakaran.

Tags : MINISTER ,PERYAKARAPPAN ,Chennai ,Peryakarapan ,Tamil Nadu ,Chief Minister ,Chief Minister of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்