×

இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து: ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதிரடி உத்தரவு

டெல்லி: இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் இடைநீக்கத்தை ரத்து செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் தேர்தலை இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனம் வேண்டுமென்றே தள்ளி தள்ளி போட்டு வந்ததால் அவ்வமைப்பின் அங்கீகாரத்தை தற்காலிகமாக கடந்த பிப்ரவரி மாதம் ரத்து செய்து ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப்பை நடத்த ஆயத்தமாகி வந்த நிலையில் ஒன்றிய அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையால் அவ்வமைப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் டெல்லியில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் வரும் 9ம் தேதி நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதாக அளிக்கப்பட்ட உறுதியை அடுத்து இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனை வரவேற்றுள்ள இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தீபா மாலிக், இதற்காக ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே 9ம் தேதி நடக்கும் தேர்தலில் தலைவர் உள்ளிட்ட அனைத்து பதவிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post இந்திய பாரா ஒலிம்பிக் சம்மேளனத்தின் இடைநீக்கம் ரத்து: ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Indian Para Olympic Conference ,Union Ministry of Sport ,Delhi ,Union Sports Ministry ,Indian Para Olympic Committee ,IOCC ,UFC ,Union Ministry of Sport Order of Action ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...