×

பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும்: அண்ணாமலை பேட்டி

சென்னை: வேட்பாளர் தேர்வு விஷயத்தில் தேசிய தலைமையின் முடிவே இறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்ல உள்ளனர். இதனிடையே இன்று காலை 7.30 மணிக்கு பாஜக தலைமை அலுவலகத்தில் தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் உத்தேச வேட்பாளர்களின் இறுதி பட்டியல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; பாஜக மாநில தேர்தல் குழு இன்று டெல்லி செல்கிறது. பாஜக உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் டெல்லிக்கு செல்கிறோம். பாஜக தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துகளை பாஜக தலைமையிடம் கொண்டு செல்கிறோம். தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் பாஜக தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. 39 தொகுதிகளில் ஒரு தொகுதியில் அதிகபட்சமாக 63 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

39 தொகுதிகளில் பெறப்பட்டுள்ள விருப்ப மனு பட்டியலை தேசிய தலைமையிடம் ஒப்படைப்போம். 39 தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை தந்துள்ளோம். உத்தேச பட்டியலில் உள்ளவர்கள் பெயரை தெரிவிக்க விரும்பவில்லை. சில தொகுதிகளில் பாஜக மட்டுமே நிற்க வேண்டும் என்ற தொண்டர்களின் விருப்பதை தேசிய தலைமையிடம் கூறுவோம். கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு மற்றும் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும்.

இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்தம்? என தகவல் வெளியாகியுள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என பாஜக கூறியதை ஏற்க ஓ.பன்னீர்செல்வம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ். பாஜக கூட்டணியில் இடம்பெறுவாரா? என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். ஓபிஎஸ்ஸை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கும் பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். தாமரையில் போட்டியிட நிர்பந்தம் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓபிஎஸ் தரப்பு பாஜக கூட்டணியில் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

The post பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும்: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Annamalai ,Chennai ,Tamil Nadu ,Union Associate Minister ,L. Murugan ,State President ,Delhi ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...