×

வரலாற்றில் முதல் முறையாக தங்கம் பவுன் ரூ.49 ஆயிரத்தை நெருங்குகிறது: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

சென்னை: வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவாக தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்தோடு காணப்பட்டு வருகிறது. சில நாட்களில் தொடர்ச்சியாக அதிகரித்தும் வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.46,480க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது. அதாவது 29ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,520க்கு விற்கப்பட்டது.

1ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.46,720க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினம் பவுனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு பவுன் ரூ.47,520க்கு விற்கப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 3 நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் முந்தைய நாள்(சனிக்கிழமை) விலையிேலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் தங்கம் மார்க்கெட் தொடங்கியது.

அதில் தங்கம் விலை பெயரளவுக்கு குறைந்து காணப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.5930க்கும், பவுனுக்கு ரூ.80 குறைந்து ஒரு பவுன் ரூ.47,440க்கும் விற்கப்பட்டது. நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. அதாவது, இன்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,015க்கும், பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு பவுன் ரூ.48,120க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் இன்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ. 48,320க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.78-க்கு விற்பனையாகி வருகிறது.

இந்த அதிரடி விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதே நேரத்தில் தங்கம் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பவுன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது நகை வாங்குவோருக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியே உயர்ந்தால் வரும் மாதங்களில் தங்கம் விலை ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை கடந்து விடுமோ? என்ற அச்சமும் நகை வாங்குவோரிடையே இருந்து வருகிறது. இது குறித்து சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து உள்ளதே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

அதாவது வேலைவாய்ப்பு, ெபாருளாதாரம், உற்பத்தி என்பது ஒரு சாதகமான சூழ்நிலையில் இல்லாத நிலை இருந்து வருகிறது. இதனால், பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து, முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். இது போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களிலும் தங்கம் விலை உயர்வு தொடரும். மேலும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வரலாற்றில் முதல் முறையாக தங்கம் பவுன் ரூ.49 ஆயிரத்தை நெருங்குகிறது: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...