×

டாக்டரை மிரட்டி ₹22 லட்சம் நூதன மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மும்மை போலீஸ் ஹவாலா வழக்கு பதிந்ததாக

வேலூர், மார்ச் 6: ஹவாலா பணப்பரிவர்த்தனையால் மும்பை போலீஸ் வழக்கு பதிந்துள்ளதாக, டாக்டரிடம் ஆன்லைன் காலில் மிரட்டி ₹22 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் வேலூர் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூரை சேர்ந்தவர் பூபேஷ்(42), டாக்டர். இவருடைய செல்போனிற்கு சில நாட்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. இதில் பேசியவர்கள், ‘டிராயில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு வாங்கப்பட்டுள்ளது. அந்த சிம் கார்டு மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி ஹவாலா போன்ற சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாக மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் விசாரணை செய்ய ஸ்கைப் ஐடியில் தொடர்பு கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளனர். அதன்படி ஸ்கைப் ஐடியில் தொடர்பு கொண்டபோது, ஹவாலா பணம் தொடர்பாக கைது நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும், கைது நடவடிக்கை தவிர்க்க பணம் அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பி பூபேஷ், ₹22 லட்சத்தை அந்த நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர், போலியாக ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றப்பட்டதை அறிந்து பூபேஷ், சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். வேலூர் எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில், ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் புனிதா நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், ‘சமீப காலமாக இதுபோன்று போலியான டிராய், சைபர் கிரைம், சிபிஐ அதிகாரி போன்று பேசி ஏமாற்றுபவர்களிடம் பணம் செலுத்த வேண்டாம். மேலும் பொதுமக்கள் வாட்ஸ்ஆப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடங்களில் முதலீடு, டாஸ்க், ஆன்லைன் பார்ட் டைம் ஜாப் தொடர்பான வரும் விளம்பரங்களை நம்பி பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம். இவ்வாறு பண இழப்பு ஏற்பட்டால் உடனடியாக சைபர் கிரைம் இலவச உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்’ என்றனர்.

The post டாக்டரை மிரட்டி ₹22 லட்சம் நூதன மோசடி வேலூர் சைபர் கிரைம் போலீஸ் விசாரணை மும்மை போலீஸ் ஹவாலா வழக்கு பதிந்ததாக appeared first on Dinakaran.

Tags : Vellore ,Mumbai Police ,Vellore Cybercrime Police ,Bhupesh ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...