×

குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற தொடக்கக்கல்வி இயக்குனர் மாணவ, மாணவிகளுடன் சிற்றுண்டி சாப்பிட்டார் வேலூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம்

வேலூர், மார்ச் 6: வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்த தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்றார். மேலும் மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. அதன்படி வேலூர் காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி நேற்று நடந்தது. வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி) தயாளன், வட்டார கல்வி அலுவலர்கள் பரமேஸ்வரன், வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் நளினி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளி கல்வித்துறை தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கலந்து கொண்டு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். இதில் காகிதப்பட்டறையை சேர்ந்த 10 பெற்றோர் தங்கள் குழந்தைகளை 1ம் வகுப்பில் சேர்த்தனர். அந்த குழந்தைகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாலை அணிவித்து வரவேற்றார். பின்னர் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பலகை, வண்ண பென்சில்கள், கிரையான்ஸ் ஆகியவை வழங்கப்பட்டன. இதில் பள்ளி ஆசிரியர்கள், அப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அந்த பள்ளி வளாகத்தில் நடந்த ஊரகப்பகுதி மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவுத்தேர்விற்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர், மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கி, அவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டார்.

The post குழந்தைகளுக்கு மாலை அணிவித்து வரவேற்ற தொடக்கக்கல்வி இயக்குனர் மாணவ, மாணவிகளுடன் சிற்றுண்டி சாப்பிட்டார் வேலூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,S. Kannappan ,Corporation Middle School ,Kagipattarai ,Tamil Nadu ,Vellore government ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...