×

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி ஒரிசா மாநிலத்தவருக்கு தர்ம அடி

ஜெயங்கொண்டம், மார்ச் 5: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் கடந்தசில தினங்களாக குழந்தை கடத்தல் நடைபெறுவதாகவும், இதில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து மாவட்ட போலீசார் குழந்தை கடத்தல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை எனவும், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கண்டியங்கொல்லை கிராமத்தில் வடக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவரது பேரன் ஜெகன் (8) நேற்று இரவு அந்தப் பகுதியில் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்த வட மாநிலத்து முதியவர் ஒருவரை பார்த்து பயந்த அச்சிறுவன் சத்தம் போட்டு ஓடி உள்ளான்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அந்த நபர் சிறுவனை கடத்ததுவதற்காகத்தான் வந்துள்ளார் என எண்ணி, அந்த நபரை பிடித்து நாலாபுறமும் சேர்ந்து கொண்டு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் தலைமையிலான போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் உள்ளிட்ட போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிராம மக்களிடமிருந்து அந்த நபரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ஒரிசா மாநிலம் குகுந்தி பூரி தாலுகா கோலா ஜாஸ்னா பகுதியை சேர்ந்த 58 வயதான பிரதீப்குமார் என்பதும் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்ததாகவும் போலீசாருக்கு தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பொதுமக்களிடம் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் உங்கள் பகுதியில் நடமாட்டம் இருந்தால் உடனே போலீசாருக்கு தெரியப்படுத்துங்கள் எனக் கூறி வந்தனர்.

The post ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை கடத்த வந்ததாக கூறி ஒரிசா மாநிலத்தவருக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Dharma ,Orissa ,Jayangondam ,Jaiangondam ,Ariyalur district ,northern ,Dharma Badi ,
× RELATED தெய்வச்செயல்