நாமக்கல், மார்ச் 5: நாமக்கல்லில் ₹194 கோடியில் 22 கி.மீ தூரத்துக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு, அமைச்சர் எ.வ.வேலு நேற்று அடிக்கல் நாட்டினார். நாமக்கல் நகரில் ₹194 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில் 3ம் கட்ட பணியான வேட்டம்பாடி முதல் திருச்சி சாலை வரை, சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் உமா தலைமை வகித்து பேசினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி, சின்ராஜ் எம்பி, எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
விழாவில், தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நாமக்கல் புறவழிச்சாலை, முதலைப்பட்டி கிராமத்தில் ஆரம்பித்து, அதே சாலையில் வள்ளிபுரம் கிராமத்தில் முடிவடையும் வகையில் 22 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக முதலைபட்டியிலிருந்து புதிய பஸ் நிலையம் வரை, புறவழிச்சாலைக்கு 800 மீட்டர் மற்றும் 200 மீட்டர் நீளத்திற்கு இணைப்பு சாலை ₹25 கோடியில் நடந்து வருகிறது. இரண்டாவது கட்டப் பணி, புதிய பஸ் நிலையத்திலிருந்து வேட்டாம்பாடி வரை அமைக்க ₹119 கோடிக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.
மூன்றாவது கட்டப் பணியாக, வேட்டாம்பாடியில் இருந்து திருச்சி ரோடு வரை 6 கி.மீ நீளத்திற்கு ₹48 கோடிக்கு பணிகள், தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 4வது கட்டப்பணி திருச்சி சாலையில் இருந்து – வள்ளிபுரம் வரை 10 கி.மீ நீளத்திற்கு நில எடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவைப்படும் ₹16 கோடியை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ஒதுக்க ஏற்பாடு செய்யப்படும்.
நாமக்கல்லில் புறவழிச்சாலை அமைவதன் மூலம், முதலைப்பட்டி, முதலைப்பட்டிபுதூர், செல்லிப்பாளையம், வேப்பநத்தம் புதூர், வசந்தபுரம் உள்ளிட்ட 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயனடைவார்கள். ராசிபுரம் நகருக்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி 5 கி.மீ நீளத்திற்கு ₹20 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ராசிபுரம்-திருச்செங்கோடு புறவழிச்சாலை 6 கி.மீ நீளத்திற்கு ₹61 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் 207 பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ₹312 கோடியில் 355 கிமீ தூரத்துக்கு சாலைகள் போடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். பின்னர், அமைச்சர் வேலு, 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ₹1.30 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணைத்தலைவர் பூபதி, திமுக நகர செயலாளர்கள் ராணா.ஆனந்த், சிவக்குமார், அட்மா குழுத்தலைவர் பழனிவேல், சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நக்கீரன், முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர்கள் சந்திரசேகர், முருகேசன், நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) அசோகன், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அருள், பொருளாளர் சீரங்கன், இணை செயலாளர் சந்திரசேகரன், ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சின்னுசாமி, பொருளாளர் சுப்பிரமணியன், இணை செயலாளர் பரமசிவம், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தலைவர் சிங்கராஜ், செயலாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர்கலந்து கொண்டனர்.
The post நாமக்கல்லில் 22 கி.மீ தூரத்துக்கு ₹194 கோடியில் புறவழிச்சாலை appeared first on Dinakaran.