×

மற்றவர்கள் மீது பழிபோடுவதுதான் மோடி பார்முலாவா.. இந்தியா முழுவதும் போதைப்பொருள் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு; குஜராத் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் தடுக்காதது ஏன் : பிரதமருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி?

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, போதைப்பொருள் தமிழகத்தில் இருக்க கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குஜராத்தில்தான் போதைப்பொருள் நடமாட்டம் அதிகம் உள்ளது என்பது நாடறிந்த ஒன்று. எல்லாவற்றிற்கும் இன்று உடந்தையாக இருந்து கொண்டு மாநில அரசின் மீது குற்றச்சாட்டு சுமத்துவது வீண் விவாதத்திற்கு வழி வகுப்பதாகும். ஏனென்றால் தமிழ்நாட்டில் அமைதியான ஆட்சி, நிலையான ஆட்சி, சுமூகமான ஆட்சி மக்களுக்கான ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது. நார்கோட்டிக் கன்ட்ரோல் பீரோ (என்சிபி ) என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு? அதற்கு மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர் மோடி பார்முலாவா? ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, வட கிழக்கு மாநிலங்கள் போன்றவற்றில் எல்லாம் அவை பயிர் செய்யப்படுகின்ற என்ற தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மீது பழிபோட்டால் தேர்தலுக்காக பழிபோடுகின்ற செயலை ஒன்றிய அரசு செய்தால் நிச்சயமாக தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல, பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பில் ஹெராயின் போன்ற பொருட்கள் குஜராத்தில் உள்ள கடற்கரையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலை அவரது கட்சியில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்கட்டும். குஜராத், அவர்கள் ஆளுகின்ற மாநிலங்களில், டெல்லியில் தடுக்கட்டும். டெல்லியில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்தான் டெல்லி போலீஸ் உள்ளது. அதனை தடுக்கட்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் விஜயபாஸ்கர் இல்லம் தேடி குட்கா என்று பேசியுள்ளார். அவர் மீது வழக்கு இருப்பதை மறந்துவிட்டு பேசியுள்ளார். அவர் இல்லம் தேடி போய் பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* அதிமுக ஆட்சியில் அமைச்சர் குட்கா விற்றார் பாஜ ஆட்சியில் நிர்வாகிகள் போதை பொருள் கடத்துகிறார்கள்
அமைச்சர் ரகுபதி கூறுகையில், ‘கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு அமைச்சரே குட்கா வியாபாரத்திற்கு உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆளுநரும் அந்த அமைச்சர் மீது வழக்கு தொடருவதற்கு ஆளுநர் அனுமதி தந்துள்ளார். தமிழ்நாட்டில் முக்கியமாக 16 ரவுடிகள் கஞ்சா கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் சிவப்பு கம்பளம் வீசி வரவேற்கப்பட்டு ஒன்றிய ஆட்சியில் உள்ள கட்சியில் சேர்த்துகொள்ளப்பட்டுள்ளார்கள். அகில இந்திய அளவில் ஒன்றிய அரசின் கட்சியில்தான் அதிகமான பேர் இந்த மாதிரியான தொழில்களில் ஈடுபடுகின்றவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேர் பட்டியல் காவல்துறையிடம் உள்ளது. இவர்கள் மீது 23 வழக்கு உள்ளது. இதில் 14 பேர் பாஜவை சேர்ந்தவர்கள்’ என்றார்.

* கஞ்சா பயிரிடாத பூமி தமிழ்நாடு
‘தமிழகத்தை பொறுத்தவரையில் இன்று கஞ்சா பயிரிடப்படாத ஒரு பூமி. பக்கத்தில் உள்ள ஆந்திராவில் பயிர் செய்வதை கூட நாம் தென் மாநில டிஜிபிக்கள் கூட்டத்தில் தமிழ்நாடு டிஜிபி எடுத்து கூறி அங்கேயும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பயிரிடப்பட்ட கஞ்சா பயிர்கள் அழிக்கப்பட்டன’ என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

போதை பொருள் கடத்தி கைதான பாஜ நிர்வாகிகள்
1 சரவணன் பா.ஜ உறுப்பினர்
2 ராஜேஷ் சென்னை 109வது வட்ட பாஜ தலைவர்
3 விஜயநாராயணன் மத்திய சென்னை பாஜ செயற்குழு உறுப்பினர்
4 விஜயலட்சுமி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர், நெடுங்குன்றம் துணை தலைவர்.
5 மணிகண்டன் பாஜ தாழ்தப்பட்டோர் பிரிவு மண்டல தலைவர்.
6 ஆனந்தராஜ் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ எஸ்சி, எஸ்டி துணை தலைவர்
7 ராஜா (எ) வசூல் ராஜா காஞ்சிபுரம் மாவட்ட பாஜ இளைஞர் நலன் அபிவிருத்தி பிரிவு செயலாளர்.
8 குமார் (எ) குணசீலன் பாஜ உறுப்பினர்,
9 மணிகண்டன் திருச்சி பா.ஜ உறுப்பினர்
10 லிவிங்கோ அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ முன்னாள் செயலாளர்
11 சிதம்பரம் (எ) குட்டி தஞ்சாவூர் வடக்கு மாவட்ட பாஜ துணை தலைவர்
12 ராஜா (எ) சூரக்கோட்டை ராஜா பாஜ விவசாய பிரிவு மாநில செயலாளர்.
13 சத்யா (எ) சத்யராஜ் பாஜ உறுப்பினர்
14 காசிராஜன் (எ) காசி மதுரை பாஜ இளைஞர் அணி செயலாளர்.

* பல்லாயிரம் கோடி போதைப்பொருளுக்கு சொந்தக்காரர்கள் யார்?
விருதுநகரில் எம்பி மாணிக்கம்தாகூர் கூறுகையில், ‘இந்தியாவில் போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விற்பனை, குஜராத் முத்ரா துறைமுகத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை அதிகாரிகள் பிடித்தது இவை அனைத்தையும் பற்றி பேச நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்கு பிரதமர் மோடி வாய் திறந்து பதில் அளிப்பாரா என்று பார்ப்போம். குஜராத்தில் பிடிப்பட்ட பல்லாயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள், குஜராத் முதல்வர், அமித்ஷா, மோடிக்கு சொந்தமா என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். மோடிக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? மோடி அதிக பொய் பேசி பேசி பிரதமராகி இருக்கிறார். மோடி வந்து போவதால் அண்ணாமலைக்கு வேண்டுமானால் பயம் வரலாம். எங்களுக்கு பயம் ஒன்றும் இல்லை’ என்றார்.

The post மற்றவர்கள் மீது பழிபோடுவதுதான் மோடி பார்முலாவா.. இந்தியா முழுவதும் போதைப்பொருள் அதிகரிப்பதற்கு யார் பொறுப்பு; குஜராத் உள்ளிட்ட பாஜ ஆளும் மாநிலங்களில் தடுக்காதது ஏன் : பிரதமருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி? appeared first on Dinakaran.

Tags : Modi ,India ,BJP ,Gujarat ,Minister ,Raghupathi ,Tamil ,Nadu ,Law ,Raghupathi Nagercoil ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த நடிகர் பிரகாஷ்ராஜ் அழைப்பு